விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோதே உடனடியாகவே விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும். இதனை செய்யாது மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்து விட்டார்.
ஒரு பௌத்த பிக்கு, அல்லது ஒரு சிங்கள இனவாத அமைப்பைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருந்தால் அதனை ஒரு பிரச்சினையாக பார்க்க முடியாது. ஆனால், பொது மக்களின் பாதுகாப்பிற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அட்மிரல் சரத் வீரசேகரவே இவ்வாறு கூறுகின்றார்.
இத்தனைக்கும், கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பதை நிரூபிப்பதற்காக, கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்யாததை தவிர, அனைத்தையும் சம்பந்தன் செய்தார்.
2012 பாராளுமன்ற உரையொன்றில், விடுதலைப் புலிகள் சிங்கள, தமிழ், முஸ்லிம் அப்பாவி மக்களை கொலை செய்ததாகவும் அதன் காரணமாகவே, விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக கணிக்கப்பட்டதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
தன்னையும் விடுதலைப் புலிகள் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் வைத்திருந்தார்கள் என்றும் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இத்தனைக்குப் பிறகும் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகள் தயாராக இல்லை.
என்னதான் வேதாளத்தை திருப்திப்படுத்த முற்பட்டாலும் இறுதியில் அது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் அம்புலிமாமா கதை போன்றே தென்னிலங்கையிலுள்ள கடும்போக்கு வாதிகள் நடந்து கொள்கின்றனர்.
ஆனால், இதனால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்மை வருகின்றதென்றால் நிச்சயமாக இல்லை. எக்காலத்திலும் எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களின் வாக்குகளை ராஜபக்ஷக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுனவினால் பெறமுடியாதளவிற்கே மஹிந்தவின் கட்சியிலிருக்கும் சிலர் நடந்து கொள்கின்றனர்.
2020ல் வெற்றி பெற்றது போன்று எல்லாக் காலத்திலும் வெற்றி பெறலாம் என்னும் கற்பனா வாதிகளே ராஜபக்ஷ சகோதரர்களை சுற்றியிருக்கின்றனர்.
2015ல் ராஜபக்ஷக்கள் வீழ்சியுற்ற போதும் அவர்களுடன் இருந்தவர்களே ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்புவதில் பெரியளவில் பங்களித்திருந்தனர்.
அவர்களது தமிழ், முஸ்லிம் வெறுப்பே தமிழ், முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களுக்கு எதிராகத் திரும்புவதற்கு காரணம். முக்கியமாக பொதுபல சேனா இதில் பிரதான பங்கு வகித்திருந்தது.
பொதுபல சேனாவும் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென்னும் பிரசாரங்களை செய்தது. இறுதியில் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ராஜபக்ஷ வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அரசியலில் எவரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேவேளை, எவர் எப்போது தேவைப்படுவார் என்பதையும் எவரும் அறியார். ஆனால், சரத் வீரசேகர போன்றவர்களினால் கூட்டமைப்பே பலமடைந்து கொண்டிருக்கின்றது.
அதேவேளை, அரசாங்கத்தை – மஹிந்தவை நம்பி காலத்தை செலவு செய்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கிருக்கும் மக்கள் செல்வாக்கு வீழ்சியடைகின்றது. டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் பலவீனப்படுவதும் மஹிந்தவின் வீழ்ச்சி தான்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், ராஜபக்ஷ சகோதரர்களின் எதிரிகள் எவருமே வெளியில் இல்லை. அவர்களது முகாமிற்குள்ளிருந்து, கூடவே அலைந்து கொண்டிருக்கின்றனர்.
கொஞ்சம், கொஞ்சமாக ராஜபக்ஷ சகேதரர்கள் கீழ்நிலைக்கு செல்வதற்கான சூழலை, கூட இருப்பவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ராஜபக்ஷ சகோதரர்களின் வெற்றிக் கண்கள் தங்களுக்கு வெளியில் எதனையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. வெற்றிவாதம் அவர்களது கண்ணை மறைத்துக் கொண்டிருக்கின்றது.
பெரும் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியுற்ற கதையிலிருந்து ராஜபக்ஷக்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ள வேண்டுமென்னும் ஆகக் குறைந்த மனோநிலையும் அவர்களிடம் இல்லை.
தமிழர்களை அடக்கி, ஒடுக்கி விடுவது தொடர்பிலேயே அவர்களது மனது இறுகிக் கிடக்கின்றது.
