இலங்கை செய்திகள்

கார்த்திகை விளக்கீடு என்றால் என்னவென்று இவர்களுக்கும் தெரியாதா?

தமிழ் இந்துக்களின் பாரம்பரிய நிகழ்வான கார்த்திகை தீபம் ஏற்றுவதை பொலிஸார் தடை செய்தனர் என தமிழர் தரப்பில் பரவலான குற்றச்
சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

இதுதொடர்பில் சம்பந்தனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, கார்த்திகை விளக்கீட்டையும் மாவீரர் தினத்தையும் ஒன்றாக புரிந்து கொண்டதன் விளைவாகவே இவ்வாறானதொரு விடயத்தில் பொலிஸார் ஈடுபட்டனர் எனக் கூறப்படுகின்றது.

அவர்களைப் பொறுத்தவரையில் வீடுகளின் முன்னால் விளக்கேற்றுவது என்றால், விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதென தவறாக புரிந்து கொண்டிருந்ததாகவும், இதனால்தான் இவ்வாறானதொரு தவறு நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் காலத்தில் தமிழர்கள் விளக்கேற்றினால் அது விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்காகத்தான் என்றே
தென்னிலங்கையிலிருந்து கடமைக்காக வந்திருப்பவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.

உண்மையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பணியில் ஈடுபடும் பொலிசார் மற்றும் படையினர் அப்பகுதியிலுள்ள மதச் சடங்குகள் மற்றும் மக்களின் கலாசாரம் தொடர்பான விளங்கங்களுடன் இருக்க வேண்டியது அவசியம்.

சாதாரண சிங்களவர்கள் எதனையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அதனை தவறாக கருத முடியாது. ஆனால், அரசாங்க திணைக்களங்களில் பணி புரிவோர், படையினர் ஆகியோர் இந்த விடயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டியதும், மக்களின் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் அவர்களது கடமையாகும்.

இந்த இடத்தில் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கின்றது.

ஒருவேளை படையினர், பொலிஸாருக்கு இந்த விடயம் தெரியாமல் போனதை ஒரு புறமாக வைப்போம் ஆனால், இலங்கையில் இந்து கலாசார திணைக்களம் என்று ஒரு திணைக்களம் இருக்கின்றதே, அதிலுள்ளவர்களும் இந்து மக்களின் கார்த்திகை விளக்கீடு தொடர்பில் அறிந்திருக்கவில்லையா?

இந்து மக்களின் சடங்குள், பழக்க வழக்கங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளாமலா ஒரு திணைக்களம் இயங்கி வருகின்றது? அவ்வாறாயின், பின்னர் எதற்காக இந்து கலாசராத்திற்கென ஒரு தனியான திணைக்களம்?

இந்த திணைக்களம் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கீழ்தான் இயங்கி வருகின்றது. அண்மையில், இந்துக்களின் தீபத் திருநாளான தீபாவளி தினம் மிகவும் ஆடம்பரமாக பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

அடுத்த கேள்வி, அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற – அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்தை நியாயப்படுத்துகின்ற, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கும் கார்த்திகை விளக்கீடு என்றால் என்வென்று தெரியாதா இத்தனைக்கும், டக்ளஸ் தேவானந்தா முன்னர் இந்து கலாசார அமைச்சராகவும் இருந்த ஒருவர்.

அரசாங்கத்திற்கு கார்த்திகை விளக்கீடு தொடர்பில் தெரியாமல் இருந்தால், அதனை தெளிவுபடுத்தி, கார்த்திகை விளக்கீடு என்றால் என்ன? இதன்போது இந்து தமிழ் மக்கள் தங்களின் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றுவார்கள்.இது ஒவ்வொரு வருடமும் நிகழும் ஒரு சமய நிகழ்வு இதன்போது மக்கள் தங்களின் வீடுகளில் இறந்தவர்களுக்கு அவர் விரும்பியுண்ட உணவுகளை படைப்பார்கள். இது, தமிழ் இந்துக்களின் சம்பிரதாயம் இவற்றையெல்லாம் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கு தெளிவுபடுத்தியல்லவா இருந்திருக்க வேண்டும்.

அடுத்தது, வடக்கில் முகாமிட்டிருக்கும் இந்து அமைப்புக்கள் – நல்லை ஆதீனம் போன்றவை மேலும், இந்துக்களை பலப்படுத்துவோம் என கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்களின் அமைப்புக்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

கார்த்திகை விளக்கீட்டிற்கும் மாவீரர் தினத்திற்குமான வித்தியாசத்தை அசாங்கத்திற்கு புரிய வைக்கும் பணிகளை இவர்கள் ஏன் செய்யவில்லை? இவர்களுக்கும் கார்த்திகை விளக்கீடு என்றால் என்னவென்று தெரியாதா?

Most Popular

To Top