இலங்கை செய்திகள்

பிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..? தென்னிலங்கை அமைச்சர் கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்த முடியும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

சுமந்திரன் தமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் கூறிய போதிலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ததற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான பண்டிதன் என்பவரை யாழ்ப்பாணத்திற்கு சென்று சுமந்திரன் நினைவு கூர்ந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு தாய் தனது இறந்த மகனை நினைவு கூர்வதில் தவறில்லை எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான பிரச்சினை என்பதனால் இதனை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த தாயுடன் இணைந்து தாம் குறித்த நபரை நினைவு கூர்ந்ததாக நாடாளுமன்றில் சுமந்திரன் கூறும் விளக்கம் சிறுபிள்ளைதனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வெளியில் நிறுத்திவிட்டு சுமந்திரன் எவ்வாறு வீட்டுக்குள் சென்று புலித் தலைவர்களை நினைவு கூர முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்டிதன், கிட்டு போன்றவர்கள் பிரபாகரனின் நெருங்கிய சகாக்கள் எனவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த படைத்தரப்பினரையும் இவர்கள் கொலை செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியையும் விடுதலைப் புலிகளையும் ஒரே விதமாக நோக்க முடியாது எனவும், புலிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தவர்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமந்திரன் ஓர் இனவாதி என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சுமந்திரனுக்கும், சரத் வீரசேகரவிற்கும் இடையில் மன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Most Popular

To Top