இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு! -இன்றைய கொரோனா நிலவரங்கள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய பிரதேசங்களில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , கண்டி மாவட்டத்தில் புதன்கிழமை 45 பாடசாலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்திற்கு கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இம் மொத்த தொற்றாளர்களில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 96 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை நேற்று கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதற்கமைய நாட்டில் இது வரையில் 4 மாவட்டங்களில் 18 பொலிஸ் பிரிவுகளும் 14 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி வரை 553 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 022 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 6110 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு , 15 816 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் மாத்திரம் 18 491 ஆக உயர்வடைந்துள்ளது.

கல்முனை கல்வி வலயத்தில் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் 21 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்.

ஆளுநரின் இத்தீர்மானம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த வலயத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும். இந்நிலையின் கீழ் எழுமாற்று பரிசோதனைகளின் அளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கும் மேலதிகமாக அக்கறைப்பற்று, சாய்ந்தமருது மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இந்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடமாடுமாறும், இயன்றளவு வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் கோரப்படுகிறது.

மக்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

கம்பஹா : கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை, வத்தளை, ராகம, நீர்கொழும்பு, களனி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு : கொழும்பு மாவட்டத்தில் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, புளுமென்டல், கிரான்பாஸ், தெமட்டகொடை, மருதானை, கோட்டை, டாம் வீதி மற்றும் மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட 13 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் வனாத்தமுல்ல மற்றும் வேகந்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை : களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம மேற்கு, கோரவல, கலஹாமண்டி, போஹாவத்தை, பமுனுமுல்ல (முஸ்லிம் பிரிவு), கிரிமந்துடாவ, பமுனுமுல்ல, அட்டலுகம கிழக்கு, எபிடமுல்ல மற்றும் கொலமெதரிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி : கண்டி மாவட்டத்தில் புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

துறைமுக முனையங்களின் நடவடிக்கைகள் வழமைக்கு

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான அனைத்து முனையங்கள் மற்றும் ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த வாரத்தில் துறைமுக முனையங்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

துறைமுக அதிகாரசபை மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு துறைமுக சேவைகள் மற்றும் முனையங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால், அது தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக 0112 320 405 மற்றும் 071 688 94 52 ஆகிய இலக்கங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top