இலங்கை செய்திகள்

வடக்கு,கிழக்கில் சூறாவளி ஆபத்து! – மக்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 24 ம் திகதி சூறாவளி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றின் ஒரு சுழற்சி செயற்பாடு காரணமாக நேற்று (21) காலை முதல் குறித்த பகுதி குறைந்த அழுத்தப் பகுதியாக (2N10N, 83E-93E) உருவாகியுள்ளது. நாளை வரை இது மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணத்தினால் தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதியில் நாளை 23ம் திகதியளவில் ஒரு தாழமுக்க வலயம் உருவாகும் சாத்தியம் உள்ளது என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தாழமுக்க வலயம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மற்றும் இந்த தாழமுக்கம் காற்றின் வேகத்தை திடீரென அதிகரிக்கலாம் எனவும் வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கங்கேசன்துறையில் இருந்து கரையோரத்தில் உள்ள கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

திருகோணமலை வழியாக பொத்துவில் வரை அலைகளின் தாக்கம் காரணமாக ஏற்படும் (2.0-3.0) மீற்றர் உயர அலைகள் மேல் எழும்பும் சாத்தியம் உள்ளது.

எச்சரிக்கை
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கிழக்கு நோக்கி கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Most Popular

To Top