இலங்கை செய்திகள்

யாழில் அறுவர், முல்லையில் இருவருக்கு கொரோனா! கொழும்பிலிருந்து கொண்டு வந்தவர்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பிலிருந்து வந்தவர்களே இந்தக் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகள் ஆகியோருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்குப் பேலியகொட மீன் சந்தை கொத்தணிப் பரவல் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார் என்று சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்குக் கொரோனாத் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த வேளையில் நேற்று அவர்களுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 7 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.

Most Popular

To Top