இலங்கை செய்திகள்

ஐ.தே.க. ஆட்சியில் இலங்கை மீது எந்த நாடுமே சந்தேகப்படவில்லை! ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கை குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை சீனாவுக்கு வழங்கியமை குறித்து அமெரிக்கா அதிருப்தியானதும் சந்தேக நோக்குடனுமே உள்ளது. இதை அரசு உணர்ந்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயத்தின்போது சீனாவை விமர்சித்தது போன்று மனித உரிமைகள் குறித்தும் நினைவூட்டினார்.

எனவே, எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அந்த நாட்டின் தேசிய கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம்.

சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் எமது இராஜதந்திர தொடர்புகளும் அணுகுமுறைகளும் எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை.

ஆனால், ராஜபக்சக்களின் ஆட்சியில் சீன சார்பு என்று இலங்கை அநாவசியமாக அடையாளப்பட்டது. இதுவே இன்றைய நெருக்கடிகளுக்கும் காரணமாகியுள்ளது.

எனவே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் விஜயத்தை அரசு எளிதாக எடுத்துக்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் சிறப்பாக அணுக வேண்டும்.

குறிப்பாக எம்.சி.சி. ஒப்பந்தம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு மாறுபடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top