இலங்கை செய்திகள்

ஊரடங்கு காலப்பகுதியில் விதிக்கப்பட்டுள்ள தடை, மீறினால் சட்ட நடவடிக்கை

முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொது நிகழ்வுகளையும் நடத்துவதற்கு இவ்  ஊரடங்கு காலப்பகுதியில் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி பொலிஸ்மா அதிபர்  இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், 

தற்போது நாட்டில் 68  பொலிஸ் பரிவுகளுக்குத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் நாளை(29.10.2020)நள்ளிரவு முதல், மேல் மாகாணத்தின் 112 பொலிஸ் பிரிவுகளுக்கும் குளியாபிட்டியின் 5 பொலிஸ் பிரிவுகளுக்குமா 117 பொலிஸ் பிரிவுகளுக்கு  எதிர்வரும் திங்கட் கிழமை( 02.11.2020) காலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

எனினும் தற்போது நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள 68  பொலிஸ் பரிவுகளுக்கு  திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது. அவ் பிரதேசங்களுக்கு மீள அறிவிக்கும் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தற்போது நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ள 68  பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாளை காலை 08மணி  முதல் இரவு 10 மணிவரை குறித்த பிரதேசங்களின் மருந்தகங்கள், அரச ஒசுசல, சதோச மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என்பன திறக்கப்பட  அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து எவரும் வேறு இடங்களுக்குச் செல்வதும் வேறு இடங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாகவும் சாதாரணமாகவும் பிரவேசிப்பதற்கு எந்த ஒரு தனிநபருக்கும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

எனினும் அம்புயுலன்ஸ்  வாகனங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தரப்பினருக்கும் மட்டும் இக் காலப்பகுதியில் விசேட அனுமதியுடன் மேல் மாகாணத்திற்குப் பயணிக்க முடியும்.

அதேவேளை உயர்தர மாணவர்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் இவ் ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும்.

அத்துடன் முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிகழ்வு, கூட்டங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொது நிகழ்வுகளையும் நடத்துவதற்கு இவ்  ஊரடங்கு காலப்பகுதியில் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் அதற்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டும். 

முன்பு போன்று இல்லாமல் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தீவிர தன்மை கொண்டதாக தொரிவிக்கப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் நிலைமையை கருத்தில் கொண்டு செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளான சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களைக் கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ள சட்டவிதிகளுக்கு அமைய நாம் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Most Popular

To Top