இலங்கை செய்திகள்

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

முஸ்லிம்களின் மனநிலையையும் முழுமையாக கவனத்தில் கொண்டு ஜனாதிபதிக்குள்ள தனித்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, மரணித்தவர்களை அடக்குவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்து கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு!

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட் 19 – கொரோனா தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலைமையை நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம்.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் முதல் அலை இலங்கையில் ஏற்பட்ட நேரத்தில் உங்களது தலைமையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறப்பாக கையாண்டமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதே வேலை தற்போதைய, அசாதாரண, ஆபத்தான சூழலையும் நம் நாடு வெற்றிகொள்ள முஸ்லிம் சமூகம் சார்பில் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் உங்கள் தலைமையிலான அரசுக்கு வழங்க எந்நேரமும் தயாராக இருக்கிறோம் என்கிற நற்செய்தியையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கொவிட் 19 – கொரோனா வைரஸ் பரவுகை இலங்கையை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தும் ஒரு வைரஸ் தொற்று என்பதால் அனைத்து நாடுகளும் மிகவும் அவதானமாக அதனை கையாளும் அதே வேலை அனைத்து தரப்பு மக்களின் மனநிலைகளையும் புரிந்து காரியமாற்றுவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் நம் நாட்டில் கொரோனா பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதுடன் மரண வீதமும் அதிகரித்து வருகின்றது. இந்தக் கடிதம் எழுதப்படும் வரை 19 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கும் நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. இதுவரை மரணித்தவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டுள்ளார்கள்.

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றில் உயிரிழப்போரை அடக்கவும், எரிக்கவும் அனுமதித்துள்ளன. அவரவர் மத அனுஷ்டானங்களின் அடிப்படையில் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தும் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்க அனுமதி வழங்கியுள்ளன.

நம் அண்டை நாடான இந்தியாவில் கூட அடக்கம் செய்வதற்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எம்மை விட தெளிவாக நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், நம் நாட்டில் அடக்குவதற்கான உரிமை மறுக்கப்பட்டு, கொரோனாவில் உயிரிழப்பவர்கள் எரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த நடைமுறை இஸ்லாமியர்களாகிய எம்மை மனதளவில் மிக ஆழமாக பாதித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

இலங்கையில் தற்போது 20வது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக தாங்கள் மாறியுள்ள நிலையில், இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமையையும், முஸ்லிம்களின் மனநிலையையும் முழுமையாக கவனத்தில் கொண்டு ஜனாதிபதிக்குள்ள தனித்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, மரணித்தவர்களை அடக்குவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

தம் உறவுகள் கொரோனாவில் மரணிக்கின்ற நிலையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவது என்பது எம் சமூகத்தை மனதளவில் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

உங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உரிமையை மீட்டுத் தரும் போது இந்த சமூகம் உங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

Most Popular

To Top