இலங்கை செய்திகள்

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் – 19 அசாதாரண சூழ்நிலையில் டெங்கு அபாயமும் அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளையும், சுற்றுப்புற சூழல்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 281 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் 114 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் மாத்திரம் ஓட்டமாவடி பிரதேசத்தில் 48 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவினரின் ஆய்வின் படி பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நுளம்புகள் வீட்டினுள் காணப்படுகின்றன.

வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதுடன் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Most Popular

To Top