சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிஸாரால் மீட்டுள்ளன.
நேற்றையதினம் ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றியவாறு டிப்பர் வாகனமொன்று பயணிப்பது தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மரக்கடத்தல் சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி 10 லட்சம் ரூபா மதிக்கதக்கது எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின் நீதிமன்றில் சந்தேகநபருக்கெதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பூநகரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
