தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வாரத்தில் இரு நாட்களில் அப்பகுதிகளில் கடைகள் மருந்தகங்கள் என்பவற்றை திறந்து வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெளிவுபடுத்துகையில்,
கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவிகள் , கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவிகள், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் மற்றும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகள் என 68 பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தில் ஊரடங்கு அமுலிலுள்ள பொலிஸ் பிரிவுகளில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையும் , கொழும்பு மற்றும் குருணாகலில் ஊரடங்கு அமுலிலுள்ள பொலிஸ் பிரிவுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும்; காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் மருந்தகங்களை திறந்து வைக்க அனுமயளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மக்கள் தங்களுக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்யும் போது உரிய சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றார்.
