அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உட்பட அரசின் மூத்த தலைவர்களை அவர் இன்று சந்திக்கின்றார். ஊடக மாநாட்டிலும் அவர் பங்குபற்றுவார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசின் காலத்திலும் – 2019 ஜூனிலும் – அவர் இலங்கைக்கு வரத் திட்டமிட்டிருந்தார். அவரின் வருகைக்கு எதிராக அப்போது தெற்கில் பெரும் கிளர்ச்சியே நடந்தது.
அவரின் வருகையால் நாடே கெட்டழிந்து விடும் என்பது போன்ற தோற்றப்பாடு அப்போது எதிரணியில் இருந்தவர்களால் இப்போது ஆட்சித் தரப்பில் இருப்பவர்களால் – அச்சமயம் காட்டப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று சரியாக இரண்டு மாத காலத்தில் கொழும்புக்கு வருவதற்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் அப்போது திட்டமிட்டிருந்தார்.
அதற்கு சற்று முன்னர்தான் நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் பெரு வெற்றியீட்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேரடியாகச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து விட்டு, ஜப்பானுக்குப் போகும் வழியில் கொழும்பு வருவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
அச்சமயம், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களினால் துவண்டு போய்க் கிடந்த கொழும்பு அரசுக்கும் மக்களுக்கும் அமெரிக்க மக்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவை நேரில் தெரிவிப்பது அவரின் நோக்கமாக இருந்தது.
ஆனால், அச்சமயத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலரின் வருகைக்கு எதிராக விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில, சீதா அரம்பொல அம்மையார் போன்றோர் எல்லோரும் காட்டுக் கூச்சல் எழுப்பினர்.
ஏதோ அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்தும் விதத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் வருகின்றார் என்ற கருத்தில் அமெரிக்கர்களுக்கு எதிரான உணர்வெழுச்சிப் பேச்சுக்கள் கொடிகட்டிப் பறந்தன.
அச்சமயத்தில் திட்டமிட்டபடி புதுடில்லி விஜயத்தை முன்னெடுத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, தென்னிலங்கையில் கிளப்பப்பட்ட காட்டுக் கூச்சலை அடுத்து கொழும்புக்கான தனது விஜயத்தை ரத்துச் செய்தார்.
அச்சமயம், மைக் பொம்பியோவுக்கு எதிராக மைக் பிடித்துக் குரல் எழுப்பிய விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, சீதா அரம்பொல அம்மையார் எல்லோரும் இன்று கோட்டா அரசில் அமைச்சர்கள். அதனால் பம்மிக் கொண்டிருக்கின்றார்கள்.
மைக் பொம்பியோ வந்து விட்டார். ஆனால் அவரின் வருகையை முன்னர் கடுமையாக எதிர்த்தவர்களை இன்று மைக்கின் முன்னால் காணவில்லை. அவர்கள் தாங்களாகவே பதுங்கிக் கொண்டு விட்டனர் – தமது பதவி நிலையைக் காப்பாற்றுவதற்காக.
ஆனால் தமக்குப் பதிலாக தமது “பினாமிகள்’ போன்ற சீனத் தூதரகம் மூலம் தங்களின் கைவரிசையைக் காட்டுகின்றனர் அவர்கள்.
அப்போது – 2019 ஜூனில் – அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் வருகைக்கு எதிராக பெரும் கிளர்ச்சி பண்ணிய பெளத்த, சிங்கள தேசியக் கட்டமைப்புகள் எல்லாம் இப்போது ஏனோ அமுக்கி வாசிக்கின்றன.
ஆனால் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு போன்ற ஒரு சில மட்டுமே நாங்களும் எதிர்ப்புக் காட்டினோம் என்ற வரிசையில் சில எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தன.
மைக் பொம்பியோவின் வருகையை ஆட்சேபித்து நேற்றுக் கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்தை அண்மித்ததாக -ஜே.வி.பி. நடத்திய ஆர்ப்பாட்டம் கூட ஏதோ கடமைக்கு – ஒப்புக்குச் சப்பாணி போல – முன்னெடுக்கப்பட்ட ஒன்று மாதிரியே தோன்றியது.
தென்னிலங்கையின் “கார்ட் போட்’ சண்டியர் விமல் வீரவன்ஸ போன்றோர் காட்டும் அமெரிக்க எதிர்ப்பு வாதம் உண்மையில் சிங்களத் தேசியத்தின் – அல்லது இலங்கை தேசியத்தின் -அடி ஊற்றில் இருந்து பீறிட்டு எழுவதாக இருந்தால், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரின் இப்போதைய விஜயத்தின் போதும் அது வெடித்து வெளிப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அது அப்போது பதவியைக் கைப்பற்றுவதற்கான வெறும் பிரசாரக் கூச்சலாக இருந்தது என்பதால் தான், பதவியைத் தேடி அலைந்த போது, அச்சமயத்தில் – 2019 ஜூனில் பீறிட்டு வெடித்தது.
இப்போது பதவியைத் தக்க வைத்துக் காப்பதற்காக அமுங்கிப் போய்க் கிடக்கின்றது.
