இலங்கை செய்திகள்

தொற்றைக் கட்டுப்படுத்தும் கட்டம் தாண்டிப் போகிறதா?

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் மூடனுக்குக் கோபம்’ என்பார்கள். அப்படி இரண்டும் கெட்டான் நிலையில் நின்று பரிதவிக்கின்றது பொதுஜன பெரமுன அரசு.

எல்லை மீறி, கொரோனாத் தொற்றுப் பரவல் நாடெங்கும் வியாசித்து வருகின்றது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் எண்ணுக் கணக்கின்றி தொற்றாளர்கள் வெளிப்படத் தொடங்கிய போது, மினுவாங்கொட தொழிற்சாலையை ஒட்டி தொற்றுப் பரவலுக்கான ஒரு கொத்தணி உருவாகியுள்ளது என்று அறியப்பட்ட போதே – விவகாரம் எல்லை மீறப் போகின்றது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றுப் போகப் போகின்றது, தொற்று, அணை உடைத்த ஆறாகப் பெருகி, பரவப் போகின்றது என்று பல தரப்புகளினாலும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டே வந்தது.

அதனால், முன்னெச்சரிக்கையாக முழு நாட்டையும் முழுமையாக முடக்குங்கள், இதுவரை பரவிய தொற்றை அந்தந்த இடங்களோடு அடக்கிக் கட்டுப்படுத்த அதுவே ஒரே வழி என்று பல தரப்புகளினாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அரசும் அதிகாரிகளும் மசிந்து கொடுக்கவில்லை.

நாட்டை இன்னொரு தடவை முடக்குவது மீள முடியாத பொருளாதாரச் சிக்கல்களுக்குள்ளும், தாங்க முடியாத நெருக்கடிக்குள்ளும் நாட்டைத் தள்ளி விடும் என்று கருதியோ என்னவோ நாட்டை முடக்கும் திட்டத்துக்கு அரசு உடன்படவேயில்லை.

தொற்றுப் பரவும் இடங்களை மட்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திப் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று படம் காட்டியது அரசு.

அரசைப் பொறுத்தவரை ஒரு பக்கம் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல், மறுபுறம் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி. இரண்டுக்கும் நடுவில் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் கட்டத்தில் அது.

நாட்டை முடக்க மறுத்த அரசு, அது தொடர்பில் எதிர்க்கட்சிகளினதும், விவரம் அறிந்த நிபுணத்துவத் தரப்புகளினதும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆட்பேசத்துக்கும் உள்ளாகி வருகின்றது.

நாட்டில் கொரோனாத் தொற்று சமூகப் பரவலாகி விட்டதா, மினுவாங்கொடையில் ஏற்பட்ட தொற்றைக் கொத்தணித் தொற்று என்று அழைக்கலாமா, பேலியகொடவில் நேர்ந்தது கொத்தணித் தொற்றா, உப கொத்தணித் தொற்றா என்று சொல்லாடல்களை ஒட்டி விவாதம் நடத்தி, மக்களின் கருத்து நிலைப்பாட்டை சலவை செய்து சமாளிக்க முயல்கின்றது அரசு.

இந்தச் சொல்லாடல் சர்ச்சையும், நிபுணத்துவக் கருத்து நிலைப்பாட்டு முரண்பாடுகளும் கொழும்பில் பிய்த்து உதறப்பட, கொரோனா வைரஸோ கிடைத்த ஓட்டைகளுக்குள்ளால் தன் கைவரிசையைக் காட்டி, அகலக்கால் வைத்து, பல பிரதேசங்களிலும் வியாபித்து, முழு இலங்கையையும் கபளீகரம் செய்யும் வீரியத்துடன் பரவி வருகின்றது.

முழு நாட்டையும் முடக்குவதற்கு மறுத்த, அரசு, இப்போது தொற்று அடையாளம் காணப்படும் இடங்களை மட்டும் தனிமைப்படுத்தி முடக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றது.

ஆனாலும் அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன.

போகின்ற போக்கில் இந்தத் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் – அனைத்து மாவட்டங்களுக்கும் பரந்து விடும் என்பது தெரிகின்றது.

முழு நாட்டையும் முடக்க மறுத்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரிக்கப்படும் தனிமைப்படுத்தல் பிரதேங்களை ஒரு கட்டத்தில் முழு நாட்டுக்கும் விரிவாக்கம் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்படலாம்.

ஆனால், அப்போது தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தல் முழுமையாக அரசினதும், அதிகாரிகளினதும் கைகளைக் கடந்திருக்கும் என்பது திண்ணம்.

தொற்றுப் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் வியாபித்து வருகின்றது. அதை எதிர்கொள்வதற்கு பயனுள்ள, பெறுபேறுகளைத் தரக்கூடிய, உசிதமான, உருப்படியான, இறுக்கமான திட்டம் ஏதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

நடப்பது நடக்கட்டும், போகும் வரைப் போவோம் என்ற பாணியில் விடயங்கள் அணுகப்படுகின்றனவோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

எப்படி நிலைமையை அரசு சமாளிக்கப் போகின்றது?

Most Popular

To Top