இலங்கை செய்திகள்

சர்வாதிகாரத்தின் வேர்

இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசும் ஒவ்வொருவரும் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிவருகின்றனர்.

அவ்வாறாயின் கோட்டாபய அரசாங்கத்தோடு எந்தவொரு ஜனநாயக நாடுகளும் தொடர்புகளைப் பேணாதா? முக்கியமாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொழும்புடனான தொடர்புகளைத் துண்டித்து விடுமா?

நிச்சயமாக இல்லை. அனைத்து நாடுகளும் கோட்டாபய அரசாங்கத்தோடு தொடர்புகளைப் பேணத்தான் போகின்றன. உடன்பாடுகளை எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளத்தான் போகின்றன.

சர்வாதிகாரம் தொடர்பில் பேசுவதில் தங்களின் நேரத்தை செலவிடுவோர் இந்த விடயங்களை ஆழமாக உற்று நோக்க வேண்டும்.

இலங்கையில் அரசியல் யாப்பின் ஊடாக சர்வாதிகார ஆட்சிக்கான அடித்தளம் உருவாகுவது உண்மையென்றால் அது எப்போதோ ஆரம்பித்து விட்ட ஒரு சங்கதியாகும்.

இப்போது இடம்பெறுவதெல்லாம் எப்போதோ போடப்பட்ட அடித்தளத்தில் பயணிப்பதற்கான முயற்சிகள் மட்டும் தான்.

1978ல் ஜே. ஆர். ஜெயவர்த்தன தன்னை சர்வ வல்லமையுள்ள ஒருவராக ஆக்கிக் கொள்வதற்காக, புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வந்தார்.

ஜெயவர்த்தனவின் வார்த்தையில் சொல்வதானால் “ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர அனைத்தையும் செய்வதற்கான அதிகாரமுள்ள ஓர் அரசியல் யாப்பு.

அப்போதும் இன்று விவாதிப்பது போன்று தான் சிலர் ஜே. ஆரின் முயற்சியை சர்வாதிகாரம் என்றனர்.

அப்போது, தமிழ் மக்களின் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் 1978 அரசியல் யாப்புக்கு பாராளுமன்றத்தில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு, விவாதத்தில் கலந்து கொள்ளாது தனது சகாக்களுடன் வெளியேறினார்.

ஜெயவர்த்தனவின் அரசியல் யாப்பைப் பலரும் அரசமைப்பு சர்வாதிகாரம் (Constitutional Dictatorship) என வர்ணித்தனர்.

அப்படியானால் கடந்த 42 வருடங்களாக அரசமைப்பு சர்வாதிகாரத்தின் கீழ் தானே நாடு இருந்து வருகின்றது.

இந்த சர்வாதிகாரத்தின் கீழ் தானே அனைத்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற சலுகைகளை அனுபவித்தனர் – அனுபவிக்கின்றனர்.

விக்னேஸ்வரனும் இந்த சர்வாதிகாரத்தின் கீழ் தானே நீதிபதியாக இருந்திருக்கின்றார்.

இதுதான் தமிழ் மிதவாத அரசியலிலுள்ள பிரதான பிரச்சினை. தமிழ் மிதவாதிகள் எதனை எதிர்க்கின்றார்களோ அதனை பிறிதொரு புறம் நடைமுறையில் ஏற்றுக்கொள்கின்றனர்.

தமிழ் அரசியல் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் மட்டும் தான் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் யாப்பில் காலத்திற்கு காலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான மாற்றங்களில் 13வது திருத்தச்சட்டம் ஒன்று தான் தமிழ் மக்களின் பிரச்னையை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு திருத்தம். ஆனால், அதுவும் ஜெயவர்த்தனவின் அரசமைப்பு சர்வாதிகாரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் தான்.

எனவே, இலங்கையின் ஜனநாயக அரசியலுக்குள் சர்வாதிகாரத்தின் வேரை புகுத்தியது ராஜபக்ஷக்கள் அல்ல மாறாக, ஐக்கிய தேசியக் கட்சி வழி ஜெயவர்த்தனவே ஆவார்.

இதனைப் புகுத்தியது ஜெவர்த்தனவாக இருந்தாலும் கூட, ஜெயவர்த்தனவிற்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அனைத்து சிங்கள தலைவர்களும் அந்த வேரை பிடுங்கி எறிய முயற்சிக்கவில்லை.

மாறாக, நீரூற்றி வளர்த்தனர். ஏனெனில், அனைவருமே ஜெயவர்த்தன அனுபவித்ததைத் தாங்களும் அனுபவிக்கவே விரும்பினர். இதுவே இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தம்.

இப்போது ராஜபக்ஷக்களின் தருணம். அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே அனுபவிக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில் ராஜபக்ஷக்கள் அவர்களது முன்னோர்களின் வழியில் சுதந்திரமாக கைவீசிக் கொண்டு செல்ல விரும்புகின்றனர்.

இதில் ஆச்சரியப்பட்ட ஒன்றுமில்லை. இது சிங்கள அரசியல் பரம்பரையின் வாழையடி வாழைப் பிரச்சினை.

இந்த பிரச்சினையின் இன்றைய முகம்தான் 20வது திருத்தச்சட்டம்.

இது விரைவில் புதிய அரசியல் யாப்பு என இன்னொரு முகத்தையும் காட்டலாம்.

Most Popular

To Top