இலங்கை செய்திகள்

20ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் ஹக்கீம், ரிஷாத் மீது சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனும் இரட்டை வேடம் போட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தாங்கள் வாக்களிக்காமல், தமது கட்சிக்காரரைக் கொண்டு வாக்களித்து 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உதவியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் வலுவாக இருக்கின்றது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொம்மைவெளி – வசந்தபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்குமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதேபோல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே, 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும், ரிஷாத்தும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்கள், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top