இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல்வரை அவ்வாறே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அங்குள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளையும் நாளைய தினம் திறக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த வங்கிக் கிளைகளை திறப்பதற்கு அவசியமான பணியாளர்கள், தங்களின் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி சேவைக்கு சமூகமளிக்க முடியும் என கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை முதலான காவல்துறை அதிகார பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

90 ஆயிரம் மெட்றிக் தொன் கிலோ கிராமுக்கும் அதிகளவான சீனி நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தடைகள் எதுவும் இல்லை.

எனவே, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் அவசியமற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான தேவை இல்லை.

நாடு முழுவதையும் முடக்குவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

கொரோனா தொற்றறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top