இலங்கை செய்திகள்

இலங்கையில் மீன் விநியோகம் தடை! தேங்கிக்கிடக்கும் மீன்கள்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் மீன் சந்தைகள் மூடப்பட்டதை அடுத்து மீன் விநியோகத்தில் முடக்கநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து லட்சம் கிலோ கிராம் மீன்கள் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான விநியோகதஸ்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொழும்புக்கு மீன்களை அனுப்புவதை நிறுத்தியதன் விளைவாக ஏற்றுமதி சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நுகர்வோர் மத்தியில் விற்கப்படாத மீன் பங்குகளை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பதை ஆராய சுகாதார அமைச்சும் மீன்வள அதிகாரிகளும் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஆனால் பெரும்பாலான மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் விற்பனையாளர்கள் விற்பனையில் இருந்து விலகியிருப்பதன் காரணமாக இயல்பை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளனர்.

காலி, பேருவளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டி, புத்தளம், மன்னார் மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய மீன்வளத் துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், நுகேகொட ஹோமகாம, பாணந்துறை,ஹட்டன், தலவாக்கலை, நீர்கொழும்பு, குருநாகல் மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள மீன் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்ட பேலியகொட சந்தையுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாவர்.

பேலியகோட சந்தை மற்றும் பிற மீன் சந்தைகளில் இருந்து இதுவரை 800 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், துறைமுகங்கள் மற்றும் மீன் சந்தைகள் மூடப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் 50,000 மீனவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை மீன்வள சம்மேளனத்தின் செய்தித் தொடர்பாளர் ரத்னா கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் 200 பாரவூர்திகளில் மீன்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வந்தன.

எனினும் அவை அனைத்தும் கடந்த சில நாட்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கில் உள்ள மீன்வள அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்டன் சத்குணராஜா தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top