இலங்கை செய்திகள்

பேசு பொருளாகியுள்ள சவேந்திர சில்வா மீதான தடை!

இலங்கையின் இராணுவ தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் மீது அமெரிக்க அரசாங்கம் விதித்த பயணத் தடை மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது.

அடுத்த வாரம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே, இந்தத் தடை விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கையிலெடுத்திருக்கின்றார்.

இராஜாங்கச் செயலர் பொம்பியோவிடம் இந்தத் தடையை நீக்குமாறு அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென்று பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்பினால் தான் அவ்வாறானதொரு தடை விதிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதிலளித்திருக்கின்றார்.

ஆனால், சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு பிரேரித்ததே தான்தான் என்று பிரேமதாஸ பதிலளித்திருக்கின்றார்.

அமெரிக்க அரசாங்கம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சவேந்திர சில்வாவும் அவரது கும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடை விதித்தது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களில், சில்வா தலைமையிலான படையினர் ஈடுபட்டமைக்கான நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியே, அமெரிக்க இராஜாங்கச் செயலகம் இந்த தடையுத்தரவை பிறப்பித்தது.

இறுதி யுத்தத்தில் பிரதான பங்கு வகித்ததாகக் கூறப்படும் 58வது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுள்ளவர்கள், அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ள பொம்பியோவிடம், இது தொடர்பில் அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென்று பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கின்றார்.

அரசாங்கம் நிச்சயம் இந்த விடயத்தை வலியுறுத்தும். ஆனால், இராணுவத்தின் பாதுகாப்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகக் காண்பிக்கும் வகையிலேயே இந்த விடயத்தை பிரேமதாஸ தற்போது கையிலெடுத்திருக்கின்றார்.

ஒபாமா நிர்வாகம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மனித உரிமைகள் சார்ந்து தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்தது.

இதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில் தான் 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரணில் அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்பட்டது.

ஆனால், அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

ஒப்பீட்டடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பலவீனமடைந்தது. குடியரசுக் கட்சி கொள்கையடிப்படையில் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதில்லை.

ட்ரம்ப், வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலங்கை யின் மனித உரிமைகள் விடயத்தை அமெரிக்கா நேரடியாகக் கையாண்டது.

மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா பின்பற்றி வரும் உலகளாவிய நிலைப்பாட்டில் கட்சிகளின் அடிப்படையில் வேறுபாடில்லை. அணுகு முறைகளில் மட்டுமே வேறுபாடுண்டு.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சவேந்திர சில்வாவின் மீதான பயணத் தடையை விதித்தது.

அடுத்த மாதம் அமெரிக்காவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் எவர் வெற்றி பெற்றாலும் இலங்கை தொடர்பான அமெரிக்க அணுமுகுறைகளில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.

மனித உரிமைகள் சார்ந்த விடயத்தில் முன்னேற்றங்களை கோட்டாபய அரசாங்கம் காண்பிக்க மறுத்தால், இது போன்ற ஏராளமான தடைகளை பிறப்பிக்கும் ஆற்றல் அமெரிக்காவிடம் உண்டு.

மனித உரிமைகள் சார்ந்த பிரச்னைகளிலிருந்து கொழும்பை, சீனாவால் அதிகம் காப்பாற்ற முடியாது.

மேலும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான உலகத் தலைமை இப்போதும் அமெரிக்காவிடம் மட்டுமே உண்டு.

Most Popular

To Top