இலங்கை செய்திகள்

வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 69 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 69 பேருக்கான நியமனங்களை நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் வழங்கி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அலுவலகத்தில் இன்று மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் சிபாரிசிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 69 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

Most Popular

To Top