இலங்கை செய்திகள்

பஸில் அரங்கேற்றிய நாடகம்

பொதுவாக அரசியலில் அதுவும் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்ற தரப்புகளுக்கு இடையில் கொண்டாட்டமும், தோல்வியுற்ற தரப்புகளுக்கு இடையில் குழப்பமும் ஏற்படுவது வழமை.

நேற்று முன்தினம் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய முழு உச்ச திருப்தியிலும் கொண்டாட்டத்திலும் ஆளும் பொதுஜன பெரமுன உள்ளது.

அந்த வெற்றியின் பிரதிபலிப்பாக அமைச்சரவை மாற்றம், மாகாண சபைத் தேர்தலுக்கான முன்னறிவிப்பு போன்ற விடயங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரப்போகும் புதிய வரவு – செலவுத் திட்ட அறிவிப்புகள் கூட உடனடியாக நடந்தேறக் கூடிய மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மக்களுக்கு சகாயம் வழங்கும் திட்டமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில், பிரதான எதிரணியில் இருந்து எட்டு எம்.பிக்களைக் கவர்ந்ததன் மூலம் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசு சுவீகரித்துக் கொண்டமை தொடர்பில் எதிரணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரதான எதிரணியில் இடம்பெற்றுள்ள தமிμ முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்குமார் அரசு தரப்புக்கு மாறி “பல்டி’ அடித்தமை தொடர்பில் முற்போக்குக் கூட்டணி நேற்று பிற்பகலில் அவசர அவசரமாகக் கூடி ஆராய்ந்திருக்கிறது.

அரவிந்குமாரை இந்த நடவடிக்கைக்காகக் கூட்டணியிலிருந்து வெளியேற்றி, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கச் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் தீர்மானத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று பிற்பகல் எடுத்திருக்கிறது.

அந்த முடிவுடன், அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடக்கவிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு, தமிμ முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், ஏனைய தலைவர்களும் செல்லவிருந்தனர் எனவும்
தெரிகின்றது.

அரசுத் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து அரவிந்தகுமாரை விலக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்படுவது போல ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்த படி அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியூதினின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் எம்.பிக்களையும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டயனா கமகே அம்மையாரையும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் நீக்குகின்றமையுடன், அதன் மூலம் அவரவர்களின் எம்.பி. பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய கூட்டத்தில் கோரிக்கை விடப்பட இருப்பதாக
அறிய வந்தது.

தத்தமது கட்சிகளிலிருந்து குத்துக்கரணம் – அந்தர்பல்டி – அடித்த எம்.பிக்களை கட்சியிலிருந்தும் அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும் எடுக்கா விட்டால் அவர்களையும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய கூட்டத்தில் பலமாக ஒலிக்கும் என்று தெரிய வந்தது.

என்ன நடக்கப் போகின்றது என்பது இன்று மாலை தெரிந்து விடும். நேற்று முன்தினம் நாடாளுமன்ற வாக்களிப்பில் மிக நுட்பமான நுணுக்கமான – ஓர் அரசியல் நகர்வு கட்டவிழ்ந்தமையை ஆழமாக ஊன்றிக் கவனித்தால் அறிய முடியும்.

சிறுபான்மையினர் விரோத – குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டை முன் நிறுத்தியே பொதுஜன பெரமுன கடந்த இரு தேர்தல்களிலும் – ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டிலும் – அமோக வெற்றியீட்டியது.

அந்த வெற்றிக்குப் பின்னரும் தனது நடவடிக்கைகள் மூலம் அந்த முஸ்லிம் விரோதப் போக்கை உறுதிப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்க அது தவறவில்லை.

இப்போது வாக்கு அரசியல் தேவைக்காக முஸ்லிம் கட்சிகளை அரவணைத்தால் தான் வளர்த்து விட்ட பெளத்த, சிங்களப் பேரினவாதத் தீயில் தானே கருகும் ஆபத்து நிலைமை பொதுஜன பெரமுனவுக்கு வந்து விடும்.

அப்படியானால் என்ன செய்வது? முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவு வாக்களிப்பில் தேவை. ஆனால் முஸ்லிம் கட்சிகளை அரவணைப்பதாக சிங்கள மக்களுக்குக் காட்டிக் கொள்ளவும் கூடாது.

இந்த இரண்டுக்கும் நடுவில் பஸில் ராஜபக்சவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஒழுங்கமைப்பட்ட நாடகம் தான் நேற்று நாடாளுமன்றில் அரங்கேறியது.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். அதனால் அந்தக் கட்சிகளை ஆளும் தரப்பு அரவணைக்கவில்லை என்று காட்டிக் கொண்டாகி விட்டது.

அதே சமயம், தேவையான எண்ணிக்கைக்கு அக்கட்சிகளின் வாக்குகளையும் சுருட்டிக் கொண்டாகி விட்டது.

முஸ்லிம் கட்சிகளையும் தலைவர்களையும் சோரம் போக வழி செய்த பலே தந்திரம் தான் இது!

Most Popular

To Top