20வது திருத்தச்சட்டம் மேலதிக ஆதரவுடன் நிறைவேறி விட்டது. இதன் மூலம் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற அரசியல் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.
19வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மீது போட்டப்பட்ட தடைகள் விலக்கப்பட்டிருக்கின்றன.
2015ல் தமிழ் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தினால் எஞ்சியிருந்த ஒரேயொரு விடயமும் இப்போது அகற்றப்பட்டு விட்டது.
இத்துடன், 2015ன் ஆட்சி மாற்றம் எந்தவொரு பெறுமதியுமற்ற ஒன்றென்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
உண்மையில் இது ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ தோல்வியல்ல. இது கூட்டமைப்பின் தோல்வி.
2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றமென்பது சர்வதேச சக்திகளின் பரிசோதனை முயற்சி.
எனவே, இதில் நிதானமாக இருக்குமாறு சம்பந்தனிடம் கோரப்பட்டது.
ஆனால், சம்பந்தன் எவரது பேச்சையும் கேட்காமல் சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகிய தனிநபர்கள் மீது நம்பிக்கை வைத்து, ஆட்சி மாற்றத்திற்கு முண்டு கொடுத்தார்.
ஆனால், அனைத்து முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீரானது.
ஆட்சி மாற்றம் தொடர்பில் சம்பந்தன் என்னவெல்லாம் பேசியிருந்தார்?
கூட்டமைப்பு எப்படியெல்லாம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருந்தது?
மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற பெருந் தலைவர்களுடன், மைத்திரிபால சிறிசேனவை ஒப்பிட்டு சம்பந்தன் பேசியிருந்தார்.
வரலாற்றில் ஓர் அபூர்வமான ஆட்சியென்று ரணில்- மைத்திரி அரசாங்கத்தை கூட்டமைப்பு வர்ணித்தது.
19வது திருத்தச் சட்டத்தை ஒரு ஜனநாயக வரப்பிரசாதமாக காண்பித்தது.
இன்று விடயங்களை திரும்பிப் பார்க்கும் போது அனைத்தும் ஏன் வீணானது? – என்னும் கேள்வியே எஞ்சிக் கிடக்கின்றது.
ஒன்றில், கடந்த காலத்தை தமிழர்கள் ஒரு பெருமூச்சுடன் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது அல்லது, தங்கள் இயலாமையை நகைச்சுவையுடன் கடந்து போக வேண்டியிருக்கின்றது.
2015ன் ஆட்சி மாற்றம், மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் ஒரேயொரு இலக்கை மட்டுமே கொண்டிருந்தது.
19வது திருத்தச் சட்டமானது, ராஜபக்ஷக்கள் எதிர்காலத்தில் கூட, அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.
உண்மையில், இலங்கைத் தீவின் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் கூட, அடிப்படையில் ராஜபக்ஷ குடும்பமே இலக்கு வைக்கப்பட்டது.
ஆனால், இன்று என்ன நடந்திருக்கின்றது? மஹிந்த ராஜபக்ஷவை அகற்றுவதற்கு திட்டம் தீட்டியவர்கள், இன்று மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவை பெரும பான்மை ஆதரவுடன் அரியணையில் அமர்த்தியிருக்கின்றனர்.
ஒருவர் ஜனாதிபதி, பிறிதொருவர் பிரதமர் என்னும் நிலைமையல்லவா உருவாகியிருக்கின்றது.
அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும், இறுதியில் ராஜபக்ஷக்களை முன்னரை விடவும் பலமான நிலையில் மீளவும் அதிகாரத்திலல்லவா அமர்த்தியிருக்கின்றது.
அவ்வாறாயின் தவறு எங்கு நிகழ்ந்தது?
தமிழர் தரப்பு தனது அரசியல் பயணத்தை, தனது சொந்த பலத்தில் திட்டமிட வேண்டும். தன்னிடம் இருப்பதைக் கொண்டு சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லாது, மற்றவர்களது நிகழ்ச்சிநிரலுடன் இணைத்து சிந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான படிப்பினைகளே தமிழர்களுக்கு பரிசாகும்.
அடுத்து வரவுள்ள ஐந்து வருடங்களுக்கு இலங்கைத் தீவின் தலைவிதியை ராஜபக்ஷக்களே தீர்மானிக்கவுள்ளனர். அதற்கான வலுவான அடித்தளத்தை அவர்கள் போட்டு விட்டனர்.
இனி எவர் விரும்பினாலும் இதை மாற்றியமைக்க முடியாது.
கோட்டாபய அரசாங்கம் சர்வதேச உறவுகளை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைக் கொண்டு, இலங்கைத் தீவின் மீதான தலையீடுகள் இடம்பெறும்.
ஒன்றில், இதில் கோட்டாபய அரசாங்கம் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம்.
ஒரு வேளை தோல்வியடைந்தால், சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கலாம்
ஆனால், அப்போதும் கூட, தமிழர்களின் அரசியலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், தமிழர் தரப்பு தனது சொந்த பலம் தொடர்பில் தெளிவற்றிருக்கின்றது. எப்போதுமே அது மற்றவர்களுக்காக காத்திருக்கின்றது.
