இலங்கை செய்திகள்

இது, வரலாற்றுத் துரோகம்!

அரசியல் நெருக்கடி சமயங்களில் சிறுபான்மையினரோடு குறிப்பாக முஸ்லிம்களோடு – கைகோர்த்து நின்ற பிற தரப்புகள் பலவும் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் கூட்டத்தினர் மீது செம’ கடுப்பில் – கோபத்தில் – சீற்றத்தில் – இருக்கின்றார்கள்.

பெளத்த, சிங்களப் பேரினவாதத்தைக் கிளப்பி, சிறுபான்மையினருக்கு எதிரான மேலாதிக்கப் போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தி, அந்த இனவாதத் தீயில் அரசியல் செய்த தரப்புகளிடமிருந்து, சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக குரல் எழுப்பிய தரப்புகள் தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் இருக்கின்றார்கள்.

நீதி, நியாயம், மனிதாபிமானம், மனித உரிமைகள், மனித விழுமியங்கள் போன்றவற்றை மதித்து, அதற்காக – அவற்றின் அடிப்படையில் – சிறுபான்மையினரான தமிழர்களுக்காவும், முஸ்லிம்களுக்காகவும் அவர்கள் தளராது குரல் எழுப்பினர். சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக – அவர்கள் பக்கத்து நியாயத்தையும் எடுத்துக் கூறி, வெளிப்படுத்தியமைக்காக – பேரினவாதிகளான அவர்களது மக்களாலேயே அவர்கள் புற மொதுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டனர்.

பெளத்த, சிங்களப் பேரினவாதப் பூதம் விஸ்வரூபம் எடுத்து, பேயுருக் கொண்டு, காட்டாட்சி நடந்த முற்படுகையில் – அத்தரப்புகளுக்கு எதிராக சிறுபான்மையினருக்காகக் குரல் எழுப்பி நிற்கும் பெரும்பான்மையின மக்களின் கட்சிகளை, சிறுபான்மை முஸ்லிம்களின் தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் நட்டாற்றில் கைவிட்டு காட்டிக் கொடுப்பு’ வேலை செய்திருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் எம்.பிக்கள் ஆறு பேர் நடந்து கொண்ட கேவலத்தை மற்றொரு முஸ்லிம் எம்.பியான இம்ரான் மஹ்ரூப் பகிரங்கமாக விமர்சித்திருக்கின்றார்.

முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்’ என்று பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிக்கின்றமையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்
கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.

இவர்கள் செய்த துரோகம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, முழு இலங்கையருக்கும் செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகம்.

இவர்கள் இன்று ஆதரவு அளித்தமையால்தான் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தால் இலங்கை மியன்மாரைப் போன்று ஆகும் என்று பிரசாரம் செய்துதான் இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகினார்கள். இனி எப்படி – எந்த முகத்தோடு – மக்கள் முன் செல்வார்கள்?” – என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் அவர்.

நியாயமான கேள்வி. மியன்மாரில் முஸ்லிம்கள் இனவழிப்புக்கு உள்ளாகின்றமை போன்ற நிலைமை ஏற்படும் என்று எச்சரித்து, அதனடிப்படையில் தமது மக்களிடம் வாக்குத் திரட்டியவர்கள், அத்தகைய இனவழிப்பை யார் செய்வார்கள் என்று குற்றம் சாட்டினரோ, அவர்களுக்கே, இனவழிப்புச் செய்யக் கூடிய கட்டுமட்டில்லா – வரையறையற்ற – அதிகாரங்களை வாரிக் குவித்து வழங்கும் அரசமைப்புத் திருத்தத்துக்குத் துணை போய் – சோரம் போய் – வரலாற்றில் மிகவும் மோசமான துரோகத்துக்குக் காரணமாகியிருக்கின்றார்கள்.

விழப் போவது படுகுழி என்று தெரிந்து கொண்டு தாம் மட்டும் விழாமல், தமது சமூகத்தை மட்டும் விழுத்தாமல், முழு இலங் கையையுமே சேர்த்து விழுத்தும் மிகமோசமான கைங்கரியத்தையே இந்த எம்.பிக்கள் புரிந்திருக்கின்றனர்.

நாட்டில் 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுயாதீனமான நீதித்துறை, அரசியல் தலையீடற்ற நிர்வாகம், சுயாதீனமான பொலிஸ்துறை போன்றவற்றை நிலைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இருபதாவது திருத்தத்தின் மூலம் பாழ்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தக் கேவலத்துக்குத் துணை போயிருக்கின்றார்கள் இந்த எம்.பிக்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வக்கற்றவர்களாக இருக்கும் அவர்களின் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் இந்த விவகாரத்தில் படுபச்சையாகவே இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்பது அனைவருக்குமே வெளிப்படையாகத் தோற்றுகின்றது.

முஸ்லிம்களையும் அவர்கள் தலைவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஹக்கீம், ரிசாத் போன்றோரையும் அரவணைத்த காரணத்தால் அவர்களுக்காகக் குரல் எழுப்பியமையால் – சஜித்தும் அவர் அணியினரும் தெற்கில் சிங்கள மக்களின் ஆதரவை இழந்து போய் நிற்க, அவர்களுக்குத் துரோகம் இழைத்து முதுகில் குத்துவது போல தமது பரவணி அரசியல் பழக்கத்தை முஸ்லிம் எம்.பிகள் மேற்கொண்டிருக்கின்றமை வரலாற்றில் மன்னிக்க முடியாத அரசியல் காட்டிக்கொடுப்பாகவும் பிறழ்வாகவும் பதியப்படுகின்றது.

Most Popular

To Top