இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 42 பேருக்கு வேலைவாய்ப்பு நியமனம்

‘துரித அபிவிருத்தியை நோக்கி வேகமாக பயணிக்கும் செயற்திட்டத்தினூடாக’ அரசினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 42 பேருக்கான நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்படுள்ளது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தானால் குறித்த நியமனக்கடிதம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

காதர் மஸ்தானின் பரிந்துரைக்கு அமைவாக முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் நேர்முக தேர்விற்கு தோற்றிய நிலையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 42 இளைஞர் – யுவதிகளுக்கான நியமன கடிதங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் போது மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு என்னும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 42 பயனாளிகளும் மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top