இலங்கை செய்திகள்

சவேந்திர சில்வாவின் அமெரிக்காவுக்கான பயணத் தடையை நீக்குமாறு சஜித் கோரிக்கை

இலங்கையின் இராணுவத் தளபதியும், செயல் பாதுகாப்புத் தலைமை அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கையை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த வாரம் பொம்பியோவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தும்போது வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையை விடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம், அமெரிக்க ராஜாங்க திணைக்களம், இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதியும், பாதுகாப்புப் படைத் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை விதித்தது.

இலங்கையின் போர்க்குற்ற விடயங்களில் நம்பத்தகுந்த ஆதாரங்களை வைத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top