இலங்கை செய்திகள்

காட்டாட்சிக்கு கட்டியம்! எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்!

இலங்கையில் ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கும் கைங்கரியம் மக்களின் பிரதிநிதிகளினால் அரங்கேற்றப்பட்டு விட்டது.

225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் இப்போது 223 பேரே உள்ளனர். அவர்களில் சபாநாயகர் போக எஞ்சிய 222 பேரில் 149 பேரே ஆளுங்கட்சி உறுப்பினர்கள்.

இந்த 149 பேரை வைத்துக் கொண்டு ஜனாதிபதிக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை 156 வாக்குகளினால் நிறைவேற்றச் செய்து எதேச்சாதிகாரத்துக்கு வழி திறந்து விட்டிருக்கின்றது ஆளும் பொதுஜன பெரமுன.

நேற்றைய வாக்கெடுப்பில் ஆளும் கட்சியில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றவில்லை.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அதைக் காரணம் காட்டி அவர் நாடாளுமன்றுக்கு வருகை தரவில்லை.

19ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்த சிற்பி நான். அப்படி இருக்கையில் அதை இல்லாமல் செய்யும் இருபதாவது திருத்தத்துக்கு நான் எப்படி ஆதரவு தர முடியும்? என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டாராம் அவர்.

ஆனால், கடந்த நல்லாட்சி அரசின் இறுதிக் காலத்தில் – தாம் ஜனாதிபதி பதவியை விட்டு இறங்கும் வரையிலும், அதன் பின்னரும், 19வது திருத்தத்தை மாற்றியமைத்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தியும் அடம் பிடித்தும் வந்தவர் அவர்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீள வலிமைப்படுத்தும் விதத்தில் 19வது திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பகிரங்கமாகப் பிரசாரம் செய்தவர்களுள் அவரும் ஒருவர்.

இப்போதைய இருபதாவது திருத்தம் ஆட்சித் தரப்புக்கு வழங்கியுள்ள அதிகாரங்களின் வலிமை வெம்மையாகத் தகிக்கும் போது அதன் விளைவுகளினால் ஜனநாயகமும், அமைதியும் அழிவுற்று, எதேச்சாதிகாரமும், சர்வாதிகாரமும், அடக்குமுறையும் எங்கும் தலைவிரித்தாடும்.

அந்தச் சூட்டைத் தாங்க முடியாமல் நாடு துடிக்கும் போது அதன் பட்டறிவை உணர வேண்டியவர்களுள் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருப்பார் என்பது தவிர்க்க முடியாததாக அமையும்.

இந்த அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பு சில பாடங்களை விடயங்களை – மக்களுக்கு தெளிவுபடுத்தவும் தவறவில்லை.

தமிழ்த் தேசியம் பேசும் – அதில் பற்றும் பிடிப்பும் உள்ள – கட்சிகளின் பிரதிநிதிகள் விலை போக மாட்டார்கள் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறத்தில் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் வழமை போல போக்கைப் புரட்டிப் போட்டு நடந்திருக்கின்றார்கள்.

இவ்வளவு காலமும் ராஜபக்சக்களின் கொடூரப் பிடியில் முஸ்லிம்கள் நடத்தப்பட்ட விதத்துக்கும், அவர்களுக்குக் கிட்டிய துன்பியல் பாடத்துக்கும் தொடர்பில்லாத முறையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் நடந்து கொண்டிருக்கின்றமையைப் பார்க்கும் போது தாங்கள் வர்த்தக சமூகத்தவர்கள், விலை நிர்ணயம் தான் விவகாரமே தவிர, கொள்கைப் போக்கு அல்ல என்பதை அந்த மக்களின் பிரதிநிதிகள் நிரூபித்துள்ளார்கள் என்றே கொள்ள வேண்டும்.

அவர்கள் அணியும் தலை அங்கியையும், அவர்களின் போக்கையும் தொடர்புபடுத்தி அப்படித்தான் நடக்கும் என ஏற்கனவே இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த அரசினதும், தலைவர்களினதும் முஸ்லிம் விரோதப் போக்கினாலும், கொடூர அணுகுமுறையாலும் முஸ்லிம் பொதுமக்கள் கடும் விசனமும் சீற்றமும் கொண்டிருக்கையில், முஸ்லிம் தலைவர்களினால் மட்டும் வாக்கைப் புரட்டிப் போட முடிந்திருக்கின்றது.

இதுவே காலாதிகால முஸ்லிம் அரசியலாக இருந்து வருவதால்தான் அந்த இனத்தின் அரசியல் செயல்பாட்டையே “புரட்டிப் போடும் அரசியலாக’ பார்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

அந்தப் பரவணிப் பண்பியல்பை முஸ்லிம் தலைவர்கள் வெட்கமின்றி மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

இருபதாவது திருத்தம் நாட்டுக்குப் பெரும் கேடு, அதை நிறைவேற்றக் கூடாது என வாதிட்ட முக்கிய பெளத்த பிக்குகள் சிலர் கூட, நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தமையை அடுத்து, இருபதாவது திருத்த எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து ஜாகா வாங்கி விட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி இருக்கையில் முஸ்லிம் எம்.பிக்கள் குத்துக்கரணம் அடித்தமை புதினம் அல்ல.

எது, எப்படி என்றாலும், நாட்டில் ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடித்தாயிற்று.

இனி காட்டாட்சி கட்டவிழும். மோசமாகக் கட்டவிழும். மிகவும் மோசமாகக் கட்டவிழும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம்? கடவுள் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

Most Popular

To Top