இலங்கை செய்திகள்

ஜனநாயகத்துக்கு சாவுமணி

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இன்று ஒரு முக்கியமான தினம்.

சர்வதிகாரப் பாதையில் செல்லக்கூடிய ஒரு நிறைவேற்றதிகார ஜனாதிபதியிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக ஆட்சி தேவை என்று அடுத்த தசாப்தத்தில் இந்த நாடு கூக்குரலிட்டுப் போராடப் போகின்றதா, அல்லது ஜனநாயகத் தாற்பரியங்களையும் விழுமியங்களையும் கட்டிக் காப்பாற்றும் விதத்தில் தனக்குத் தானே அது முன்னெச்சரிக்கையையுடன் பாதுகாப்புச் செய்து கொள்ளப் போகின்றதா என்பதை அது தீர்மானிக்கும் முக்கிய நாள் இது.

ஜனநாயகத்தின் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதற்குக் குறிக்கப்பட்ட “D – DAY” தினம்தான் இது.

இருபதாவது அரசமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினால் நிறைவேற்றப் பட்டால், அது ஜனநாயகத்துக்கான சாவு மணியாகும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக அரும்பொட்டில் அல்லாடும் ஆளும் பொதுஜன பெரமுன அதற்காக, எதிரணியில் இருந்து எம்.பிக்களை வலை வீசி மடக்கும் குதிரைப் பேரத்தில் மும்முரமாக இருப்பதாகவும் தகவல்.

அதிகாரத்தை வைத்துக் கொண்டு, பதவியாசை காட்டுவதன் மூலம் தேவையான எம்.பிக்களை வளைத்துப் போட்டுவிடும் வழமையான அரசியல் சூத்திரத்தில்தான் ஆளும் தரப்பு படு “பிஸி’யாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இருபதாவது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு எதிராக ஆளும் தரப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்பும் ஆட்சேபனையும் இருப்பதாகத் தெரிகின்றது.

குறிப்பாக இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட முடியாது என்ற அரசமைப்பின் 19வது ஏற்பாட்டை அடியோடு நீக்கும் விதத்திலான இருபதாவது திருத்தத்தின் சரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற விடயத்தில் ஆளும் தரப்பின் ஒன்றரை டசின் எம்.பிக்கள் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற சபைச் செய்தி வட்டாரங்கள் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.

இவர்களில் பதினேழு எம்.பிமார் ஒன்று சேர்ந்து இவ்விடயத்தை ஒட்டிய இருபதாவது திருத்தப் பிரிவை நாங்கள் எதிர்க்கின்றோம், ஆட்சேபிக்கின்றோம் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவுக்கு நேற்று ஒரு கடிதத்தைத் தயாரித்து கையயழுத்திட்டு அனுப்பியுள்ளனர் எனத் தெரிகின்றது.

இதற்கிடையில், பொதுஜன பெரமுன கூட்டணி அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, தமது முன்னணியின் எம்.பிக்களைத் தனது முடிவுக்கு மாறாகச் செயற்படத் தூண்டினார் எனக் கூறப்படும் மற்றொரு ஆளும் தரப்பு எம்.பியுடன், சபைக்கு வெளியே நாடாளுமன்றக் கட்டத்துக்குள் முரண்பட்டு, மோதி, தள்ளு முள்ளுப்பட்டார் என்று நாடாளுமன்றத்திலேயே பேச்சடிபட்டது.

அப்படி முரண்பட்டவர் ஆளும் தரப்பின் தேசியப் பட்டியல் எம்.பி யாவார். பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இருபதாவது திருத்தம் இப்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இவரே தமது தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைத் துறந்து, பஸில் தேசியப் பட்டியல் எம்.பியாக இடம் கொடுப்பார் எனக் கூறப்படுகின்றது.

அத்தகைய ஒருத்தருடன், தன்னுடைய எம்.பிக்களைத் தமக்கு மாறாக முடிவெடுக்கத் தூண்டினார் என்று குற்றம் சுமத்தி விமல் வீரவன்ஸ முரண்பட்டமை ஆளும் தரப்புக்குள் இருக்கும் குழப்ப நிலைமையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுவதாக நடுநிலைப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதேசமயம், இருபதாவது திருத்தத்தின் முக்கிய சரத்துகள் நிறைவேற்றப்படுகின்றமையைப் பகிரங்கமாகவே எதிர்க்கும், வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர், வண. எல்லே குணவங்ஸ தேரர் போன்றோர் கொழும்பு அபேராம விகாரைக்கு சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரா, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸநாயக்கா போன்றோரை நேற்று அழைத்துப் பேசியிருக்கின்றனர்.

இருபதாவது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பது என சுதந்திரக் கட்சி அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி முடிவெடுத்துள்ள போதிலும், வலிமையான பிக்குமாரின் கடும் அழுத்தம் காரணமாக இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தை அல்லது அதன் சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு எதிராக சு.கவினர் முடிவெடுப்பதற்கு, இன்னும் சாத்தியங்கள் – சந்தர்ப்பங்கள் – வாய்ப்புக்கள் – இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

இதனால், இருபதாவது அரசமைப்புத் திருத்தம் ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்படுவதில் சந்தேக நிலைமை காணப்படுகின்றது.

அதனால் கடைசி நேரத்தில், இரட்டைக் குடியுரிமை உடையோரும் நாடாளுமன்றத்துக்கும், பிற தேர்தல் மூலமான பதவிகளுக்கும் தெரிவு செய்யப்படுவதற்கு அனுமதி அளிக்கும் சரத்தைத் தவிர்ந்த ஏனைய இருபதாவது திருத்த விடயங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கருத்துக் கூறப்படுகின்றது.

எது, எப்படி என்றாலும் இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அது ஜனநாயகத்துக்கு நிரந்தர சாவு மணிதான். சர்வாதிகாரத்தை வரவேற்பதற்கான கட்டியம் கூறலாகத்தான் அது அமையும் என்பதும் நிச்சயம்.

Most Popular

To Top