ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே இன ரீதியில் பழி வாங்கப்பட்டுள்ளமை மிகத் தெளிவாக தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் முதல் கட்டமாக 34 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இதில் வேண்டுமென்றே இன ரீதியில் தமிழ் இளைஞர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.
இதனை உதாரணத்துடன் குறிப்பிட முடியும். அதாவது ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வாழும் கிளிநொச்சி மாவட்டத்தில் 12 இளைஞர்களுக்கு மட்டும் நியமனம் வழங்கும் அரசு, முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரம் மக்கள் கூட இல்லாத போதும் அவர்கள் அனைவருமே சிங்கள மக்கள் என்ற அடிப்படையில் அந்த பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 18 பேருக்கு நியமனம் வழங்குகின்றது.
இதேபோன்று 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 92 இளைஞர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கும் அரசு 2 லட்சம் மக்கள் வாழும் வவுனியா மாவட்டத்தில் 112 பேருக்கு நியமனம் வழங்குகின்றதே என்பது தொடர்பில் ஆராய்ந்த போது அங்கும் அதிர்ச்சியே காத்திருந்தது.
அதாவது அந்த மாவட்டத்தில் வெறும் 15 ஆயிரம் மக்கள் வாழும் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 18 பேருக்கு நியமனம் வழங்கப்படுகிறது.
நாட்டில் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றினால் நிச்சயமாக இனப் பாகுபாடு அதிகரிக்கும் எனக் குறிப்பிடும் காலத்தில் 20வது திருத்தம் வர முன்பே அரசு அதனையே செயலில் காட்டுகின்றது.
இதேநேரம் ஆளும் கட்சிக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாக போலி வாக்குறுதிகளை வழங்கிய சமயம் அதனை நம்பியே எமது இளைஞர்கள் இவர்களுக்கு வாக்களித்தனர்.
அதனைத் தேசியத்திற்கு எதிரான வாக்குகளாக இந்த அரசு காட்ட முயன்ற போதும் எமது இளைஞர்கள் தமக்கான வேலைவாய்ப்பை எதிர்பார்த்து நின்றனர். இறுதியில் அதுவும் வழங்காது அரச அடிவருடிகள் தமது வழமையான செயலை நிறைவேற்றி அரச விசுவாசத்தை காண்பித்துள்ளனர். – என்றார்.
