இலங்கை செய்திகள்

20ஐ தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது! நாடாளுமன்றில் சம்பந்தன் திட்டவட்டம்

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சபையில் நேற்று சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் 20வது திருத்தச் சட்ட வரைவு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசு தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் பக்கம் மாற்றிக் கொள்ள நினைப்பது தவறானதாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 20வது திருத்தத்தை வன்மையாகக் கண்டிக்கின்றன. நாட்டைப் பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது.

20வது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது. ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு ஒரு ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20வது திருத்தத்தினை எதிர்ப்பதற்கான காரணம்.

சரியான கொள்கைகளின் அடிப்படையில் எங்கள் முடிவுகள் எடுக்கப்படும் . இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசமைப்பு இல்லை.

தற்போதைய அரசமைப்பு 1994 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் மக்கள் ஒரு புதிய அரசமைப்பிற்கான ஆணையை தொடர்ந்து வழங்கியுள்ளனர்.

புதிய அரசமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை நாங்கள் நிராகரிப்போம். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top