இலங்கை செய்திகள்

ஆடை நிறுவனத்தில் பணியாற்ற இந்தியர்கள் நாட்டிற்கு வந்ததாக பதிவுகள் இல்லை

சமீபத்தைய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர் பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை நிறுவனம், இந்தியர்களை இலங்கைக்கு அழைத்து வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த விவகாரம் குறித்து விசாரித்ததாகவும், குறித்த கூற்றுக்களை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பிராண்டிக்ஸ் நிறுவனம் முதலீட்டு சபையின் கீழ் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் எந்தவொரு வெளிநாட்டினரையும் வேலைக்கு அமர்த்த வேண்டுமென்றால் அது முதலீட்டு சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

எனினும் அவ்வாறான ஒப்புதல்கள் முதலீட்டு சபையில் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையும் அண்மைக்காலமாக எந்தவொரு ஆடை நிறுவனத்திலும் பணியாற்ற இந்தியர்கள் நாட்டிற்கு வந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸின் சமீபத்திய அலை நாட்டில் பரவுவதற்கு இந்தியர்களை அழைத்து வந்தமையே காரணம் என்று பிராண்டிக்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் அல்லது பயணிகள் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு வரவில்லை என்று பிராண்டிக்ஸ் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் மொத்தம் 341 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவின் விசாகப் பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ஜூன் 25, ஆகஸ்ட் 8 மற்றும் 2020 செப்டம்பர் 22 ஆகிய தினங்களில் மூன்று தனி விமானங்களில் பயணம் செய்ததாக பிராண்டிக்ஸ் கூறியிருந்தது.

இதன்போது அவர்கள் இலங்கை அரசாங்க்த்தின் கொரோனா நெறிமுறை அனைத்தையும் பின்பற்றியதாக பிராண்டிக்ஸ் தெரிவித்திருந்தது.

Most Popular

To Top