இலங்கை அரசாங்கம் பல சந்தரப்பங்களில் “முள்ளை முள்ளால் எடுப்பது’ போல் நடந்து கொள்வதாகக் காட்டித் தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொள்கிறது போலும்.
தன்னுடைய சட்ட விரோதச் செயற்பாடுகளைச் சமாளிப்பதற்கு இப்படி ஒரு சமாளிப்பு நியாயப்படுத்தல்.
சட்ட முறையான விடயங்களையும், சட்டமுறையற்ற விதத்தில் நிறைவேற்றினால் அது தவறு தான். அதைப் பிற வழிகளில் நியாயப்படுத்த முடியாது.
அத்தகைய விடயங்களைச் சமாளிப்பதற்குத்தான் “முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரோபாயம்’ என்ற பேச்சு முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய இலங்கை அரசு அதையும் அப்படித்தான் நியாயப்படுத்தியது.
புலிகளின் விடுதலைப் போராட்டத்தை “பயங்கரவாதம்’ என்று சித்திரித்த கொழும்பு, பயங்கரவாதத்தைப் பயங்கரவாதம் கொண்டே அடக்குதல் என்ற கோட்பாட்டை வெளிப்படையாகக் கூறா விட்டாலும், தனது கொடூரப் போக்குக்கு – கோர நடவடிக்கைகளுக்கு தனக்குத் தானே சமாதானம் கூறும் ஒரு விடயமாகப் பயன்படுத்திக் கொண்டது.
கொழும்பின் அரச பயங்கரவாதம் இப்படித்தான் தென்னிலங்கையில் நியாயப்படுத்தப்பட்டது.
அதே பண்பியல்பைத்தான் – போக்கைத்தான் – இப்போது பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைவஸ்துக் கும்பல்களை அடக்கும் விடயத்திலும் கையாள்கின்றது கொழும்பு.
பாதாள உலகக் கடத்தல்காரர்கள், போதைவஸ்துக் கும்பல் அணியினர் ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளப்படுகின்றமையின் “என் கவுண்டர்’ படுகொலைகளின் – பின்னணியில் இதே போன்ற நியாயப்படுத்தலே முன்வைக்கப்படுகின்றது.
முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற தத்துவம் தான் அங்கு நியாயமாகப் பிளக்கப்படுகின்றது.
போதை வஸ்துக் கடத்தல் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஓரங்கமாகவே இந்தப்
போட்டுத்தள்ளல் நடவடிக்கை படு தாராளமாக அரங்கேறுகின்றது.
அரசின் தேவைகளுக்காகவும், எதிர்பார்ப்புகளுக்காகவும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சட்டத்தில் இருந்து விலக்களிக்கும் முறைமை இலங்கையின் யுத்த காலத்தில் இருந்து தொடர்கின்றது.
அந்த முறைமையைப் பால் வார்த்து வளர்த்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இப்போது நாட்டின் ஜனாதிபதி. பிறகென்ன…?
முள்ளை முள்ளால் எடுத்தல் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் அரச பயங்கரவாதம் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கட்டவிழத் தொடங்கியிருக்கின்றமையை அவதானிக்கின்றோம்.
இருபதாவது அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை முடிவுற்று அது சட்டமாகி விட்டால், இத்தகைய “அரச பயங்கரவாதம்’ இன்னும் கொடிகட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் நேற்று முன்தினம் இது போன்ற ஒரு “என்கவுண்டரில் ‘ போட்டுத் தள்ளப்பட்டிருக்கின்றார்.
இந்தக் கொடூரத்துக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் உண்மையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் புட்டுப் புட்டு வைத்திருக்கின்றார்.
மாகந்துரே மதுஷ் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
தாம் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் டுபாயில் வைத்துத் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மாகந்துரே மதுஷ்,
எண்பதுக்கும் மேற்பட்ட இலங்கை அரசியல்வாதிகள், போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில தன்னுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.
அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அங்கு அவர் தாமாகவே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப் பட்டிருந்திருப்பாராயின் அந்த அரசியல்வாதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் உண்மை முகங்கள் அம்பலமாகியிருக்கும்.
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் விவரங்கள் மக்கள் மத்தியில் தெரிய வந்திருக்கும்.
ஆனால், மாகந்துரே மதுஷ் இன் படுகொலை மூலம் அந்த எண்பது அரசியல்வாதிகளின் உண்மை முகங்களும் அம்பலமாவது நிரந்தரமாகத் தடுக்கப்பட்டிருக்கின்றது.
அதுவும், இன்றும் நாளையும் விவாதிக்கப்படும் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, பல எம்.பிக்களின் ஆதரவு பொதுஜன முன்னணி அரசுக்குத் தேவையான சமயத்தில் இந்த நடவடிக்கை அரங்கேறியிருக்கின்றது.
அத்தகைய சூழலில் மாகந்துரே மதுஷ் அதிரடியாகப் படுகொலை செய்யப்பட்டமை சில அரசியல்வாதிகளின் நெஞ்சிடிகளையும், பதைபதைப்பையும் நீக்கி, அவர்களை ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க வழி செய்யும் என்பது போன்றே தோன்றுகின்றது.
