வெலிக்கடை சிறைச்சாலையில் கலகம் ஒன்றை ஏற்படுத்தி விட்டு, சிறையில் இருந்து தப்பிச் செல்ல கைதிகள் சிலர் திட்டமிட்டுள்ளதை சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
வெலிக்கடை செப்பல் சிறை தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திக என்பவர் இந்த சதித்திட்டத்தின் பிரதான சூத்திரதாரி என தெரியவந்துள்ளதுடன் அசங்க, ரொஷான், கால்லகே, சாகர ஆகிய கைதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
றிவர்ஸ் என்ற போதைப் பொருளை கைதிகளுக்கு வழங்கி, அவர்களை மயக்கமடைய செய்து, இந்த கலகத்தை ஏற்படுத்த இந்த கைதிகள் திட்டமிட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை 4 ஆயிரத்து 49 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் செப்பல் சிறை தொகுதியில் 2 ஆயிரத்து 400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தற்போது சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கைதிகளுக்கு தமது குற்றச் செயல்களை வழிநடத்துவதில் தடையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறையில் கலகம் ஒன்றை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல இந்த கைதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய, கலகம் ஒன்றை ஏற்படுத்தும் சதித்திட்டம் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
