இலங்கை செய்திகள்

கொரோனா தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வைரஸ் தொற்றாளர்களை அறிகுறிகளின் தன்மைக்கு அமைவாக வகைப்படுத்தல், தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வுகூடங்களின் வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருக்கிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அக்கடிதத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து கடந்த 13 ஆம் திகதி கலந்துரையாடியிருந்தோம். அதனைத் தொடர்ந்து இப்பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். கொரோனா வைரஸ் பரவலைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய்கையில், சில விடயங்களுக்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கருதுகின்றோம்.

அதன்படி முதலாவதாக பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்களை நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்கள், சில அறிகுறிகள் மாத்திரம் தென்பட்ட தொற்றாளர்கள், உயர் அச்சுறுத்தலைக் கொண்ட தொற்றாளர்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்திப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அதற்கமைவாக அவர்களுக்கு வேண்டியளவிலான சிகிச்சையை மாத்திரம் வழங்க வேண்டும். இதனூடாக சுகாதாரப்பிரிவின் இயலுமையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கக்கூடிய ஆய்வுகூடங்களின் தரத்தையும் இயலுமையையும் மேம்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த மேம்படுத்தல் நடவடிக்கைகளில் அனைத்து அரச ஆய்வுகூடங்கள், பல்கலைக்கழக ஆய்வுகூடங்கள் மற்றும் தனியார் ஆய்வுகூடங்களும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். இவ்விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுயதனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் ஆகிய இருவகையான தனிமைப்படுத்தல் முறைகளும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதுவிடயத்தில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த, நடைமுறைச்சாத்தியமான நுட்பங்கள் பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். இவை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று கருதுகின்றோம்.

Most Popular

To Top