இலங்கை செய்திகள்

யாழ்.மாவட்டத்துக்கான ரூ.1,200 கோடி திட்டங்கள்!முழுமையாக கைநழுவிப் போகும் அவல நிலை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5 கோடி ஐம்பது லட்சம் டொலர் (சுமார் ஆயிரம் கோடி ரூபா) உதவியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட பணிகள் மாவட்டத்தின் அசமந்தம் காரணமாக முழுமையாகக் கைநழுவிப் போவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண நகரின் மத்தியில் 6 கட்டுமானப் பணிகளாக நகரில் கழிவு நீர் வாய்க்கால், வீதிகள், பூங்காக்கள், குளங்கள் ஆகியவற்றுடன் மேலும் இரு பணிகளாக 6 பிரதான திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 55 மில்லியன் டொலர் உதவி புரிய முன்வந்துள்ளது.

குறித்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒரு கோடி டொலர் (சுமார் 180 கோடி ரூபா) முதலிடும் என திட்டமிடப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

இதற்கான ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியான திட்டம் தயாரிக்கப்பட்ட போதும் திட்டங்களை தயாரிப்பதற்கான அடிப்படைத் தரவுகள் மற்றும் புள்ளி விவரங்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களினால் திட்டம் தயாரிக்கும் பணியே தாமதம் கண்டது.

இருந்த போதும் மாநகர சபையின் எல்லைப் பகுதிக்குள் இதன் தேவை கருதி பல கட்ட அழுத்தம் காரணமாக திட்ட முன்மொழிவு கொண்டு செல்லப்பட்டபோதும் அமைச்சினதும் மத்திய அரசின் அதிகாரிகளினதும் அசமந்தம் காரணமாக 2016 முதல் இன்றுவரை பணி ஆரம்பிக்கப்படவே இல்லை.

இதேநேரம் வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் இந்த திட்டம் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டபோதும் மாகாணசபையும் போதிய கரிசனை கொண்டிருக்கவில்லை.

இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒதுக்கிய மூலோபாய திட்ட நிதியில் இருந்து 9 மில்லியன் டொலர்
(சுமார் 162 கோடி ரூபா) நிதி கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பணிக்கு திருப்பப்பட்டது.

இருப்பினும் பணம் திருப்பிய விடயம் அப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்த போது குடாநாட்டின் பணி ஆரம்பித்தால் அந்த நிதியை மீளப் பெற்றுத்தர முடியும் என அதிகாரிகள் யாழ். மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இவ்வாறு இன்றுவரை எந்தப் பணியுமே ஆரம்பிக்காத நிலையில் எதிர்வரும் மாதங்கள் மழை காலம் என்பதோடு தற்போது கொரோனா காலம் என்பதனையும் காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் இந்த
பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசின் அனுமதியோ அல்லது அமைச்சரவை ஒப்புதலோ கிடைக்காத நிலையில், இனியும்
இந்த திட்டங்களை முன்னெடுக்க முடியாது,

அதனால் திட்டங்களை நிறுத்த வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அரைவாசியாக குறைக்க வேண்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி முதல் கட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் யாμப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டைத் தொடர்பு கொண்டு கேட்டபோது –

எமக்கு எந்தவொரு தகவலும் உறுதிபடத் தெரிவிக்கப்படாத போதும் இவ்வாறான ஒரு தகவல் கிட்டியதனால் மாநாகரசபை சார்பில் இது குறித்துப் பேச பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்க ஓர் சந்தர்ப்பம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அத்தோடு இந்த திட்டத்தை முழுமையாக பெற்றுத் தருமாறும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்படுகின்றது. – எனப் பதிலளித்தார்.

இதே நேரம் இத் திட்டத்தினை முன்னெடுக்கும் நகர அபிவிருத்தி,வீட்டு வசதிகள் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது –

மேற்படி தகவலை வாய் வழியாக கூறியுள்ளனர். இருப்பினும் இறுதி முடிவாக அறிவிக்கப்படவில்லை. அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஒரு திட்டம் நிறுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுவதனால் அதிகாரிகளிற்கும் அப்பால் அரசியல் ரீதியாகவே இவ்விடயத்தில் முயற்சி எடுக்கப்பட வேண்டும். – எனப் பதிலளித்தனர்.

முன்பிருந்த அரசின் காலத்தில் முன்னைய அதிகாரிகளும் அப்போதைய அரசியல் வாதிகளும் பாடுபட்டு தயாரித்த திட்டங்கள் வெறும் காகிதப் பதிவு அளவோடு கை நழுவிப்போகுமா என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஏற்பட்ட கால தாமதம் காரணமாக திட்டம் தடைப்படும் ஆபத்து தொடர்பில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது –

உண்மையில் இந்த மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்துக்கு, இவ்வாறு திட்ட இணைப்பாளரதும் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தினதும் முழுமையான தாமதம் காரணமாகத் தற்போது இத்தகைய அவலம் நிகμகின்றது. இருப்பினும் அதனை பெறுவதற்கே முயற்சிக்கின்றோம்.

அவ்வாறு அன்றி அது கை நழுவுமாக இருந்தால் அந்த திட்ட இணைப்பாளரும் அவர்களை நியமித்த அமைச்சுமே இதற்கு பொறுப்பாளிகள். – என்றார்.

Most Popular

To Top