இலங்கை செய்திகள்

தமிழர் தரப்புத் தயாரா?

இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய அரசின் உயர்மட்டத்தினர் – டில்லி வட்டாரங்கள் -விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர்.

இந்தியாவையும் அமெரிக்காவையும் சீண்டும் விதத்தில் சீன அரசு, இலங்கையில் ராஜபக்ச அரசுடன் நெருக்கத்தைப் பகிரங்கப்படுத்தி நிற்கின்றது. அதற்குப் பதிலடியாகவே தமிழர் விவகாரத்தை இந்தியா கையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

இப்படி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

புதுடில்லிக்கும் தமிழர் தரப்புகளுக்கும் இடையில் ஊடாட்டம் இருப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்காத இந்திய இராஜதந்திர
வட்டாரங்கள், மற்றைய விவரங்களை உறுதிப்படுத்த மறுத்து விட்டன.

நீண்ட நாள்களாக தொடர்பாடலுக்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு தமிழர் தரப்பிலிருந்து வற்புறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது. இப்போதைய கொரோனா தொற்றுப் பரவல் நெருக்கடிக்கு இடையில் நேரடியான சந்திப்புகள், கூட்டங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.

அதனால் குறைந்த பட்சம் காணொலி மூலம் ஊடாட்டம்
செய்யலாம் என்பதற்குக் கொள்கை அளவில் இணக்கத்தைத்
தமிழர் தரப்புக்குத் தெரிவித்துள்ளோம். ஆனால் அதற்கான
திகதி ஏதும் தீர்மானிக்கப்படவில்லை.- என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்தரப்பில் இருந்து சுட்டிக்காட்டப்பட்ட பிற முக்கிய விடயங்களையும் கவனத்தில் நாம் கொள்ள வேண்டும்.

முதலில் காணொலி மூலம் – இணையத் தொடர்பாடலில் ஊடாடுவது நம்பிக்கையான முறைமையல்ல. மூடிய அறைக்குள் – பிறருக்கும் பகிராமல் உயர்மட்டத்தில் – பேசப்பட வேண்டிய நம்பகமான விடயங்களை காணொலித் திரை மூலம் மேற்கொள்ளவே முடியாது. பதிவு செய்யப்படக் கூடிய காணொலி உரையாடல்களில் முழு அளவிலான இராஜதந்திர விடயங்களைப் பரிமாறுவது
என்பது சாத்தியமானதேயல்ல.

அதுவும் தமிழர் தரப்பில் இரா.சம்பந்தன் போன்றோர் தளர்ச்சியுற்ற நிலையில் இருக்கையில் காணொலித் திரை மூலம் பரஸ்பரம் நம்பிக்கையைக் கட்டி எழுப்பும் நுணுக்கமான விடயங்களை உரையாடவே முடியாது.

ஆகவே, வெளித்தரப்புகளுக்கு இராஜதந்திர ரீதியிலான சமிக்ஞைகள், செய்திகளை வெளிகாட்டுவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் இத்தகைய காணொலி மூலமான உரையாடல்கள் அமைய முடியும். அதற்கு அப்பால் இதில் பிரயோசனம் ஏதும் இருப்பதாகப் புதுடில்லி கருதவில்லை.

இன்றைய அரசியல் சூழலில் கொழும்புக்கு புதிய அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியதான புதிய நடவடிக்கைகள் ஏதும் கட்டவிழவில்லை. தமிழர் தரப்பிலிருந்து புதிய செய்திகள், தகவல்கள், நிலைப்பாடுகள் பிரதிபலிக்கப்படவில்லை.

அத்துடன் தமிழர் தரப்பு ஒன்றுபட்டு புதுடில்லியை அணுகும் சூழ்நிலையோ, ஒன்றுபட்டு ஒரே கருத்தாக – சாத்தியமான அணுகுமுறையோ முன்வைக்கப்படவில்லை.

இந்தப் பின்புலத்தில் கொழும்பை வற்புறுத்துவதற்கான எந்தத் துரும்பும் புதுடில்லியிடம் இல்லை.

இவ்வாறு இந்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

புதுடில்லி இப்போது தமிழர் தரப்பை நேரடிப் பேச்சுக்கு அழைத்தாலும், “பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற பாணியில்தான் அதனை அணுக வேண்டியிருக்கும்.

புதுடில்லியை அணுகுவதற்கான மாற்றுக் கொள்ளைத் திட்டம் ஒன்று – கொள்கை வழிகாட்டல் பாதை அல்லது குறிப்பு ஒன்று நம்மிடம் இருக்கின்றதா? குறைந்த பட்சம் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலிக்கும் சக்திகளிடையே புதுடில்லியும் சர்வதேசத் தரப்புகளும் சாத்தியமான – நியாயமான – திட்டம் என்று கருத்தில் எடுக்கக் கூடிய கோரிக்கை வடிவம் ஒன்று இருக்கின்றதா?

அதை விட்டாலும் கூட, ஆகக் குறைந்த பட்சம் இந்தியாவை மட்டுமல்ல, சர்வதேசத் தரப்புகள் அனைத்தையும் அணுகுவதற்கான ஒன்றுபட்ட தலைமைத்தளம் இருக்கின்றதா?

திம்புவில் தொடங்கி, பெங்களூர், டில்லி, கொழும்பு என்று பல இடங்களில் நடந்த பேச்சுக்களில் எல்லாம் ஒரு பக்கத்தில் ஒரே தரப்பாக இலங்கை. மறுபக்கத்தில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் என்று பல்வேறு குழுக்கள். இலங்கை அரசு கூட, தனித்து தமிழரின் ஏக பிரதிநிதிகளாகப் புலிகளுடன் பேசிய போதுதான் ஒஸ்லோ அறிக்கை வரை பேச்சுகள் முன்னேற முடிந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சர்வதேச தரப்புகள் தமது தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து
நிகழ்த்தும் சதுரங்க ஆட்டத்தின் எங்கோ ஒரு முனையில் – காய் நகர்த்தலின் இடையே – நமது நலன்களையும் பாதுகாக்கும் அருமையான வாய்ப்புக் கிட்டும். அந்த வாய்ப்பை – சந்தர்ப்பத்தை – குழப்பாமல் பக்குவமாகப் பயன்படுத்துவதற்கு முயல வேண்டும்.

அத்தகைய வாய்ப்பு இப்போது வந்திருக்கலாம். ஆனால் அதைக் கையாள்வதற்காக ஐக்கியமான – ஒன்றுபட்ட – நிலையில் சாத்தியமான திட்ட வரைபடத்துடன் தமிழர் தரப்பு தயாராக இருக்கின்றதா?

இல்லை என்பது தான் வேதனையான யதார்த்த நிலைமையாகும்.

Most Popular

To Top