இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்திய மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் படுகொலை சம்பவத்தில் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை பலிகடாவாக்க தாம் முயன்றயதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் நேற்று நான்காவது தடவையாக சாட்சியமளித்த போதே மைத்ரிபால இந்த மறுப்பை வெளியிட்டார்.

தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தாம் பாதுகாப்பு பிரதானிகளுக்கு தெரிவித்திருந்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

எப்போதும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றே தாம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வந்ததாக மைத்ரிபால தெரிவித்தார்.

தாம், நாட்டை விட்டு வெளியேறிய நேரத்தில் மாவனல்லாவில் புத்தர் சிலை உடைப்பு, வண்ணாத்தவில்லுவில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்தல் போன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும், நாட்டிற்குள் பயங்கரவாத செயல் பற்றி யாரும் தமக்கு எச்சரிக்கவில்லை என்று சாட்சியான மைத்திரிபால குறிப்பிட்டார். எனினும் 2015 ல் இருந்து, தீவிரவாதம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தாம் ஏற்கனவே வழங்கியிருந்தாக மைத்திரிபால தெரிவித்தார்.

வெளிநாட்டு புலனாய்வு தகவல்கள் ஏப்ரல் 20ஆம் திகதி முதன்முறையாக கிடைக்கவில்லை. அதற்கு முன்னரும் கிடைத்திருந்தன.

எனினும் தாம் இல்லாதிருந்தால், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்படலாம். இதனை அவர் தமக்கு அறிவித்திருப்பார். அவசரகால விதிமுறைகளை விதிக்கும் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலாளரால் செய்யப்படுவதால் இந்த விடயத்தில் தவறுகள் ஏற்பட்டிருக்காது என்று சாட்சி குறிப்பிட்டார்..

அரசாங்கத்தின் உட்பிரச்சினைகள் காரணமாக அதிகாரிகள் முடிவுகளை எடுக்க தயங்கினார்கள் என்ற கருத்தையும் சாட்சி மறுத்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சு தம்மால் கையகப்படுத்தப்பட்ட பின்னர், சஹ்ரான், நாமல் குமார போன்றோனின் செயற்பாடுகள் அதிகரித்தன என்பதை தம்மால் ஏற்கமுடியாது என்று குறிப்பிட்ட மைத்ரிபால சிறிசேன, நாமல் குமார என்ற நபர் தேசிய பாதுகாப்பு பேரவையில் கூட விவாதிக்கப்படவில்லை என்பதால் தாம் எந்த வகையிலும் அந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை.

நாமல் குமார என்ற நபரை தமக்கு தெரியாது என்று மைத்ரிபால குறிப்பிட்டார். பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகள் உரியமுறையில் செயல்படவில்லை.

பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட வழிமுறைகளைச் செயல்படுத்தவில்லை. அத்தகைய தாக்குதல் குறித்து அவர்கள் தம்மிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் கடற்படை உளவுத்துறை என்பன இலங்கையின் கிழக்கு பகுதிகளில் வலுவாக செயல்பட்டன.

ஆனால் ஏப்ரல் 16 ம் திகதி கிழக்கின் தாலங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது என்ற தகவல் தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் மைத்திரிபால சாட்சியமளித்தார்.

Most Popular

To Top