இலங்கை செய்திகள்

அநீதி இழைக்கப்படும் போது வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது!

எமது தமிழ் பேசும் சமூகம் மாற்றத்தின் பல்வேறு கட்டங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அரிதாகவே இடம்பெறும் விடயங்கள் அடிக்கடி நடக்கின்றன.

ஒரு காலத்தில் தீமை என்று கருதப்பட்ட விடயங்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. உண்மைக்கு மாறாக விடயங்களை சொல்வது கூட எமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பொதுவான விடயமாகி விட்டது.

உண்மையில் உண்மை என்ன என்பதையே நாம் மறந்து விட்டோம். பொய் சொல்வது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. ஒருவர்
பொய்யான விடயங்கள் பலவற்றை பேசினாலும் தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்று அவர் நம்புகிறார்.

உண்மையில் இது சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சமுதாயத்தில் யாவருமே ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்கள். எம்முடைய சொந்த நலன்களுக்காக நாம் மற்றவர்களை ஏமாற்ற ஆரம்பித்தால், சமூகத்தின் நிலை எவ்வாறாக இருக்கும்?

ஒற்றுமையுடன் சம உரிமைகளை அனுபவித்தவாறு மக்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றும் மக்கள் ஒருபோதும் ஒற்றுமையுடன் சம உரிமைகளை அனுபவித்தவாறு இணக்கமாக வாழ முடியாது.

எப்போதுமே நம்பிக்கையற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால், இறுதியில் முழு உறவும் பாதிக்கப்பட்டு விடும். இங்கு விடயம் என்னவென்றால், உன்னத நோக்கங்களைக் கொண்ட எந்தவொரு அமைப்பும் சமூகம் விரும்பத்தக்க செயற்பாடுகளையே மேற்கொள்ளுமாறு கோருகிறது.

அத்தகைய சமூகம் மக்கள் மீது அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொய் மற்றும் மோசடியை வெறுக்க வேண்டும். நீதியான பாதையில் பயணிக்காமல், இந்த நோக்கத்தை அடைய முடியாது.

துரதிர்ஷ்ட வசமாக, மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையற்றவர்களாக மாறி விட்டார்கள். எங்கள் அன்றாட விவகாரங்களில் நாம் முற்றிலும் உணர்வற்றவர்களாகி விட்டோம். எந்தவொரு மனசாட்சி கொண்டவர்களும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிர், உடமை அழிவை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

காலத்துக்கு காலம் இடம்பெற்ற .இனக் கலவரங்களும் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக நீடித்த யுத்தமும் தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் வெறும் பார்வையாளர்களாகவே மௌனமாக இருக்கும் நிலை காணப்படுகிறது. பாரபட்சமாக நடத்தப்படும் போது தட்டிக் கேட்க முற்பட்டால் ஏதோ ஒரு விதத்தில் பலிக்கடாக்களாக்கப்படும் நிலைமை உருவாக்கப்படுவது சாதாரண விடயமாகி விட்டது.

வீதிகளில் செல்லும் போது ஒழுங்கற்ற காரியங்கள் இடம்பெறுவதை காண்கிறோம். எங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாதது போல் தலையைத் திருப்புகிறோம்.

நல்லொழுக்கங்களையும் மக்களின் உரிமைகளையும் கற்பிப்பதற்கான இடங்களாக மதத் தலங்கள் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், சக மனிதர்களுடன் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியெல்லாம் சமூக மட்டத்தில் பெரியவர்கள் கலந்துரையாடுவது இப்போதெல்லாம் அருகி விட்டது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் குறிப்பாக விதவைகள், பிள்ளைகள், விசேட தேவையுடையவர்கள் என்று எமது சமூகத்தில் பெருந்தொகையானோர் துன்பப்படுகின்றனர்.

சமூகத்தில் உள்ள உதவியற்ற, ஏழை மற்றும் நிராதரவானவர்களை இது அவர்களின் தலைவிதியென நாம் விட்டுவிட வேண்டுமா? அவ்வாறு செய்வதன் மூலம் நாம் சமூகத்திற்குள்ளேயே வேறுபாட்டுக்கான விதைகளை விதைக்கிறோமென சிந்திக்கிறோமா?

அமைதியான பார்வையாளர்களாக மாறும் பழக்கத்தை எமது சமூகம் உருவாக்கி வருவதாக தோன்றுகிறது. ஒரு ஒழுங்கற்ற தன்மையைக் கண்டதும் விசனப்படுகிறோம்.

ஆனால்,உண்மையை ஆதரிப்பதற்குப் பதிலாக, உறவினர், நண்பர் மற்றும் அறிமுகமானவர் மற்றும் சுயநல நலன்களுக்காக பொய்களைச் சொல்வதற்கும், மோசடிகளைச் செய்வதற்கும், அடக்குமுறையை ஆதரிப்பதற்கும் கூட நாங்கள் முயற்சி செய்கிறோம்.

தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் அரசாங்கத் துறைகள்
இந்த முழு சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதை மறந்து விடுகிறோம். இந்த முறைகேடுகளில் நாங்கள் சம பங்காளிகள். நம்முடைய செயல்களுக்கு நாம் முதலில் பொறுப்புக் கூற வேண்டும்.

Most Popular

To Top