இலங்கை செய்திகள்

ஏன் இந்த அவசரம்?

நாட்டில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி நிற்கும் இருபதாவது
அரசமைப்புத் திருத்த விவகாரத்தை இழுபட விடாமல் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளும் தரப்புத் தீர்மானித்து விட்டது போலும்.

இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள்,
கிறீஸ்தவ ஆயர்கள் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியின் பின்புலத்தில், காலத்தை மேலும் இழுபட விட்டால் எதிர்ப்புத் தீவிரமடைந்து விடலாம் என்று எண்ணியோ என்னவோ திடுதிப்பெனக் காரியங்களை நகர்த்தி, விடயத்தை ஒப்பேற்றி முடித்து விட ஆளும்தரப்பு தீர்மானித்திருக்கின்றது போலத் தோன்றுகின்றது.

இருபதாவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை – தீர்மானத்தை – அனுப்பி விட்டது. ஆனால் அது இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைதான் அந்த விவரத்தை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவிருக்கின்றார் சபாநாயகர். அதன் பின்னர் தான் அது உத்தியோகபூர்வ ஆவணமாகும்.

உண்மையில் இருபதாவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுப்பதா, எடுப்பதாயின் எத்தனை நாள் விவாதம் செய்து, எப்போது விவாதத்தை நடத்துவது, விவாதத்துக்கான நேரத்தை எவ்வாறு அரச மற்றும் எதிரணித் தரப்புகளுக்குள் பங்கிடுவது என்பவை குறித்தெல்லாம் தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கலாம்.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் முடிவு என்னவென்பது சபாநாயகரினால் அறிவிக்கப்பட முன்னரே – அது தொடர்பில் ஊடகங்களில் வந்த செய்திகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலே – நாடாளுமன்றத்தில் எப்போது விவாதம் நடத்துவது, எத்தனை நாள் நடத்துவது என்பவை எல்லாவற்றையும் அரசுத் தரப்பு தீர்மானித்து விட்டது.

நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நேற்று கட்சித்
தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை செவ்வாயன்று – 20ம் திகதி – சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வாசிப்பார். அடுத்த நாள் புதன்கிழமையும் அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமையும் – 21, 22ம் திகதிகளில் –
இரண்டு நாள் விவாதத்தோடு விவகாரம் முடிவுக்கு வரும் என்பது
ஏற்பாடு.

அதாவது வியாழன் மாலையில் அல்லது இரவில் இருபதாவது
அரசமைப்புத் திருத்தம் மீதான விவாதம் முடிவடையும் போது
இறுதி வாக்கெடுப்புக்கு அந்தத் திருத்த வரைவு விடப்படும். அப்போது
அத்திருத்தத்துக்கு ஆதரவாக நூற்றியைம்பது எம்.பிக்கள்
வாக்களிப்பார்களாயின் அது நிறைவேறியதாக அறிவிக்கப்படும்.
இதுதான் நிலைமை.

இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் இருபதாவது அரச
மைப்புத் திருத்தத்தின் முடிவு – இந்த நாட்டின் ஆட்சி முறைமை
பற்றிய தலைவிதி – இன்னும் ஆறு நாள்களுக்குள் தீர்மானிக்
கப்பட்டு விடும் எனலாம்.

இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அரசுத்
தரப்புக்குள்ளேயே முரண்பாடு நிலவுகையில் – ஆட்சேபனையும்,
எதிர்ப்பும் கிளர்ந்து வருகையில் – இப்படி அதிரடித் தீர்மானத்துக்கு
அரசு ஏன் போனது என்று கேள்வி எழுவது நியாயமானதே.

தங்களுக்குள்ளான இழுபறியை – எதிர்ப்பு நிலைமையை – சமாளித்து சமரசம் ஏற்படுவதற்கு முன்னரே ஆளும் தரப்பு இப்படி அந்தத் திருத்த வரைவு மீதான விவாதத்தை நடத்தி, வாக்கெடுப்பை முன்னெடுப்பதற்கு ஏன் அவசரப்படுகின்றது என்று வினா
வெளிப்படுவது தவிர்க்க முடியாததே.

அதற்கும் காரணம் உண்டு.

இருபதாவது திருத்தத்தை இன்னும் பொதுவிவாதத்துக்கு விட்டு, மக்கள் ஆய்வுக்கு அனுமதித்து, காத்திருந்தால், அந்தத் திருத்தத்துக்கு எதிராக கிளர்ந்திருக்கும் மக்கள் அலை பேருருவம் எடுத்து விடும் என்பது கோட்டாபய அரசுக்கு நன்கு தெரியும்.

ஏற்கனவே நான்கு பெளத்த பீடங்களில் இரண்டான அமரபுர
நிக்காயவும், ராமன்ய நிக்காயவும் இந்தத் திருத்த வரைவை
அடியோடு எதிர்க்கின்றன என்று பகிரங்கமாக அறிவித்து விட்டன.

மற்றைய இரு பெளத்த பீடங்களான – மக்கள் செல்வாக்குப் பெற்ற – அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களும் இந்தத் திருத்தம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

தவிரவும் எல்லே குணவங்ஸ தேரர், முருத்தெட்டுவகம தேரர்,
பெங்கமுவே நாகந்த தேரர் போன்ற பல முக்கிய தேரர்கள் இருபதாவது திருத்த முயற்சியை இடை நிறுத்தும்படி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எழுத்து மூலம் – கடிதம் வாயிலாக கோரியிருக்கின்றனர்.

தேசிய ரீதியில் இருபதாவது திருத்தத்துக்கு வரக்கூடிய எதிர்ப்புத் தீவிரமடைந்து கடுங்கிளர்ச்சியாக மாற முன்னர், அதை நிறைவேற்றும் முயற்சியை அவசர அவசரமாக முடித்து விட அரசு
எத்தனிக்கின்றது. அரசின் அவசர குடுக்கைத்தனத்துக்கு இதுதான் காரணம்…!

Most Popular

To Top