இலங்கை செய்திகள்

அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கமாட்டேன்! முரளிதரன்

நான் 2009ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன். என இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது வரலாற்றுப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியான நிலையிலேயே முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில்,

இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்றுப்
படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய
தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு , ஜே.வி.பி போராட்டத்தில்
நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் 7 வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும்
இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும்.

என படத்திற்கு இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான்.

உதாரணமாக நான் 2009ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்களை கொன்று
குவித்த நாள் தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள், போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும்
என்பது தெரியாது. என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்
தான் நிஜம்.

இப்படிப்பட்ட சூழலில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால்
கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009ம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தைத் தெரிவித்தேன்.

ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

என்னை பொறுத்தவரை சிங்களவர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

ஒரு மலையக தமிழனான நான் என் மலையக மக்களுக்கு
செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக் காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை. ஆனால் இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் – என்றுள்ளது

Most Popular

To Top