இலங்கை செய்திகள்

மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் கட்டுமான பணிகளை அகற்ற தீர்மானம்

மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கட்டுமான பணிகளை குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் அகற்ற வேண்டும் என மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற மன்னார் நகரசபையின் விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபையின் கடந்த மாத 31ஆவது அமர்வின் போது மன்னார் நகரில் நகர சபையினால் வழங்கப்பட்ட கடைகள் தொடர்பாகவும்,மேலதிக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்ட கடைகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்து மோதல்கள் இடம்பெற்றன.

குறித்த கருத்து மோதல்கள் தொடர்பில் மன்னார் நகர முதல்வரால் விசேட குழு அமைக்கப்பட்டு குறித்த கடைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அகற்றப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த குழு ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய தினம் மன்னார் நகர சபையில் விசேட கூட்டம் மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த விசேட கூட்டம் இரண்டு விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது.

அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட கடைகளின் கட்டிட பணிகள் தொடர்பாகவும், கடந்த மாத சபை அமர்வின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பாகவும் நகர சபையின் பணியாளர்கள் தொடர்பாக எழுந்த கருத்துக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

நகர சபையின் பணியாளர்கள் தங்கள் மீது பிழையான அபிப்பிராயங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கடிதம் வழங்கி இருந்தனர்.

குறித்த கடிதம் தொடர்பாகவும் கருத்துக்கள் ஏன்? ஏதற்காக வந்தது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அதன் போது கடந்த மாத அமர்வின் போது சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்தானது சில வர்த்தக நிலைய உரிமையாளர்களினாலும், மக்களிடம் இருந்து வந்த சில விடயங்களை கதைத்த போது குறித்த கருத்துக்கள் மன்னார் நகர சபை பணியாளர்களை பாதித்துள்ளதாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, சில விடயங்கள் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மாறாக திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் சென்றுள்ளதாகவும் இதனால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதன் போது குறித்த கூட்டத்தில் கருத்துக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் என்ன விடயங்களை கதைத்தார்கள், திட்டமிட்டு யாரைப் பற்றியும் கதைக்கவில்லை என்றும் கதைத்த போது சில விடயங்கள் மாறுபட்டு வந்ததிற்கும்,நகரசபை பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் இவ்விடயம் தொடர்பாக தாங்களும் அவர்களிடம் வருந்துவதாகவும், எதிர் வரும் காலங்களில் அவ்வாறான விடயங்கள் ஏற்படாத வகையில் இரு தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விசேடமாக ஆராயப்பட்டது.

மேலும் நாங்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத கட்டிட பணிகளை அகற்றுவது தொடர்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை வைத்து அளவுத் திட்டத்தின் அடிப்படையில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் உள்ள சட்ட விரோத கட்டிட பணிகளை அகற்றுவதற்கு குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு குருகிய கால அவகாசம் வழங்கி அவர்கள் அகற்றாது விட்டால் மன்னார் நகர சபை குறித்த பகுதிகளை அகற்றி மக்கள் இலகுவான போக்கு வரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படடது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top