இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்கு அருகாமையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க முதலீட்டு வலையத்தில் இன்று முற்பகல் வரை 135 பேருக்கு கொவிட்; 19 தொற்றுறுதியானது.

எவ்வாறாயினும், மினுவாங்கொடை மற்றும் திவுலுப்பிட்டிய பிரதேசங்களில் கொவிட் 19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை மருத்துவ அதிகாரியின் அதிகார எல்லைக்கு உட்பட்ட ஹெலகந்தல, பேரலந்த மற்றும் கனிஹிமுல்ல ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலனறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதையடுத்து, குறித்த பெண் சிகிச்சை பெற்றுவந்த அறையில் பணியாற்றிய மருத்துவர்கள், பணிக்குழாமினர் மற்றும் நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வத்தளை – எந்தல சந்தியில் வீதி ஓரமாக உணவு பொதிகளை விற்பனை செய்து வந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இந்தநிலையில், அவரிடம் உணவு பொதிகளை கொள்வனவு செய்தவர்கள் அது தொடர்பில் சுகாதார தரப்பினரை தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்; 19 அச்சுறுத்தலுடன் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் சுகாதார பாதுகாப்புக்காக கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top