நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்வுகளையும் முன்வைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலிய – வலப்பனை தொகுதி அமைப்பாளர் ஹிரன்யா ஹேரத் தெரிவிக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா தொற்று தற்போது நாட்டில் வேகமாக பரவிக் கொண்டு செல்கின்றது.
இந்த நிலையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
டுபாயில் வெளிநாட்டு பணியாளர்கள் அனாதரவாக உள்ளார்கள். அவர்களுக்கு தொழில் இல்லை.
தற்போது அவர்கள் வீதிகளிலேயே இருக்கின்றார்கள். இந்த நிலையில் அவ்வாறானவர்ளை மீள நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற பணியார்கள் மற்றும் ஆடைத் தொழிற்துறையினரே நாட்டுக்கு பாரிய அந்நிய செலாவணியை ஈட்டுத் தருகின்றார்கள்.
இந்தத் துறைகளில் பெரும்பாலும் உள்ளவர்கள் பெண்களாகும். இவ்வாறு பாரிய வருமானத்தைப் பெற்றுத் தருகின்ற நபர்களைப் பாதுகாக்க மற்றும் அவர்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலிய – வலப்பனை தொகுதி அமைப்பாளர் ஹிரன்யா ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
