இலங்கை செய்திகள்

கொரோனா பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அரசுக்கு உண்டு– ரமேஷ் பத்திரண

“கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் நாட்டில் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் சமகால அரசுக்கு இருக்கின்றது என பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண இன்று தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“உலக மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை தொடர்ந்தும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

இந்தநிலையைத் தக்கவைத்துக் கொள்வதுடன் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சமகால அரசுக்கு இருக்கின்றது. இதில் திடமான நம்பிக்கையை அரசு கொண்டிருக்கின்றது.

இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். திவுலப்பிட்டிய, மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமான கொரோனா வைரஸ் கொத்தணியில் இதுவரையில் 1,591 பேர் தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளது.

24 ஆயிரத்து 778 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10 ஆயிரத்து 281 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் இந்தத் தொற்று தொடர்பில் அரசு கண்காணித்து வருகின்றது. இதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதுடன், அரசின் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

Most Popular

To Top