இலங்கை செய்திகள்

இருபதை எதிர்ப்பதற்கு மத பீடங்கள் கடைசிவரை காத்திருந்தமை ஏன்?

இருபதாவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவமானது.

குறிப்பாக ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிக்க முடியாது, தேர்தல் ஆணையாளர்களின் சுயாதீன செயற்பாட்டுக்குக் குந்தகமான பிரிவுகளுக்கு இடமளிக்க முடியாது என்பவை போன்ற விடயங்களில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மெச்சத்தக்கது.

ஆனாலும் கூட இருபதாவது அரசமைப்புத் திருத்த நகல்வரைவில், அதன் அடிப்படைக் கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் கைவைக்கவே இல்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானத்தின்படி, சமர்ப்பிக்கப் பட்டுள்ள இருபதாவது அரசமைப்புத் திருத்தத்ததில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் திருத்தங்களைச் செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்
அதை நிறைவேற்றி விடலாம் என்ற நிலைமையே உள்ளது.

ஆனால், இருபதாவது திருத்தத்துக்கு எதிர்பாராத தரப்புகளில் இருந்து முளைத்துள்ள எதிர்ப்பையும், அது தீவிரமடைந்து வரும் போக்கையும் நோக்கினால் இப்போதைய நிலைமையில் அதனை நிறைவேற்றுவது என்பது மணலைக் கயிறாகத் திரிக்கும் வேலையாகத்தான் போய் முடியும் போலத் தோன்றுகின்றது.

நாட்டின் நான்கு பெரிய பெளத்த பீடங்களில் இரண்டான அமரபுர நிக்காய மற்றும் ராமன்ய நிக்காய இரண்டும் இருபதாவது
திருத்தத்தைக் கடுமையாக ஆட்சேபித்துள்ளமை மட்டுமல்லாமல் அதை எதிர்த்தும், அதற்கான காரணங்களை வரிசைப்படுத்தியும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திருத்தத்தைப் பிய்த்து உதறியிருக்கின்றன.

பலரும் எதிர்பார்த்தபடி, பெளத்த மத பீடங்களைத் தொடர்ந்து
இப்போது கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இருபதாவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருக்கின்றார்கள்.

அதைத் தொடர்ந்து மற்றைய இரு பெளத்த பீடங்களான அஸ்கிரிய நிக்காய மற்றும் மல்வத்தை நிக்காய ஆகியவையும் இந்த
நிலைப்பாட்டுக்கு வந்து, இருபதாவது திருத்தத்தை எதிர்க்கும்
களத்தில் குதிக்கக் கூடும் என்கின்றன சில வட்டாரங்கள்.

அப்படி நடக்குமானால் கோட்டாபய ராஜபக்r அரசு தனது
ஆட்சியில் மிக முக்கிய அரசியல் நெருக்கடியைச் சந்திக்கப்
போகின்றது என்பதுதான் அர்த்தம்.

இலங்கை அரசியலில் பெளத்த மத பீடங்கள் அளவுக்கு அதிகமாகவே தலையீடு செய்து வந்திருக்கின்றன என்பதுதான் சுதந்திர இலங்கையின் சரித்திரமாகும்.

அதுவே இலங்கையின் சாபக்கேடு என்று தமிழர்கள் உட்படப் பல தரப்பினரும் விசனம் தெரிவித்து வந்தாலும், இன்று சர்வாதிகார ஆட்சி ஒன்று மலர்வதற்கு எதிரான நடவடிக்கைகளில் பெளத்த மத பீடங்களும் தம்மாலான – நியாயமான -பங்களிப்பை வழங்குகின்ற போது அதனையும் சேர்த்து வரவேற்க வேண்டிய கட்டாயம் பொதுநலன் விரும்பிகள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருபதாவது அரசமைப்புத் திருத்த விடயத்தில் முக்கியமாகக்
கவனிக்க வேண்டிய விவகாரம் ஒன்றுதான். அது – இந்தச்
சட்டம் ஜனாதிபதி என்ற தனி மனிதரை நாட்டின் சர்வாதிகாரியாக்கி விடும் என்பதுதான்.

அதுவும், தேர்தல் அரசியலில் இதுவரை சம்பந்தமேபடாத ஓர் இராணுவ அதிகாரியை திடுதிப்பென ஜனாதிபதி பதவிக் கதிரையில் இருத்தி விட்டு, இந்த அதிகாரங்களை முடியாக அவருக்குச் சூட்டுவது, நாடு தனக்குத் தானே கொள்ளி வைக்கும் வேலையாகும்.

நாட்டை இராணுவ ஆட்சி நிலைக்குத்தான் கொண்டு போவேன் என்பதைத் தனது தொடர் செயல்கள் மூலம் நிரூபித்து வரும் ஒருவரின் கைகளில் இருபதாவது திருத்தத்தில் கூறப்படும் அதிகாரங்களைக் கையளித்தால், கடைசியில் விவகாரம் “கல்லுளி மங்கன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி’ என்பதாகத்தான் முடியும் என்பது ஓரளவு ஊகிக்கத்தக்கதே.

அதைக் கவனத்தில் கொண்டே பெளத்த மத பீடங்களும், கிறிஸ்தவ ஆயர்கள் மன்றமும் இது போன்ற நிலைப்பாட்டை அவசர அவசரமாக எடுத்து நாட்டைக் காப்பாற்ற முயல்கின்றன என்பது திண்ணம்.

என்றாலும், இது கூட காலம் பிந்திய செயற்பாடுதான். இருபதாவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைகளும் முடிவுற்று, உயர்நீதிமன்றத் தீர்மானம் பகிரங்கமான பின்னர், இரண்டாம், மூன்றாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் அது எடுக்கப்படவிருக்கும் கடைசி நேரத்தில் தான் ஓடி முழித்திருக்கின்றன மத பீடங்கள்.

இதுவரை அத்தரப்புகள் தூங்கிக் கிடந்தமைக்கான காரணம்
மர்மமாக இருப்பது மறுக்கக் கூடியதல்ல.

Most Popular

To Top