இலங்கை செய்திகள்

இலங்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா ; கணவர், திருமணப் பதிவாளர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தல்

வியாங்கொட பகுதியைச் சேர்ந்த திருமணமான மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த பதிவுத் திருமணத்துக்குச் சென்ற கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பதிவுத் திருமணத்துக்காக கடந்த 2 ஆம் திகதி மினுவாங்கொடைக்குச் சென்றமை தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பியகம நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

மினுவாங்கொடைக்கு கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்யத் தனது உறவினர்களுடன் இளைஞர் ஒருவர் சென்று திரும்பிய சில நாட்களில் குறித்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞர் உட்பட அவருடன் சென்ற 14 பேருக்கும் கடந்த 10 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்த சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் உட்பட திருமண சாட்சிக்குக் கையொப்பமிட்ட இருவர் கடந்த 10 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி இளைஞரும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், 9 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top