மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி காயங்காடு பகுதியில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.
ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் காயங்காடு பகுதியில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் பெருமளவான கசிப்பு உற்பத்தி செய்வதற்கான கோடாக்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த இரண்டு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பன்குடாவெளி, தளவாய், களுவன்கேணி, கிரான், வாழைச்சேனை போன்ற பகுதிகளில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கசிப்பு உற்பத்தி செய்தல், கசிப்பு விற்பனை செய்தல், கள்ளு மற்றும சாராயம் சட்டவிரோத விற்பனை, கசிப்பு உற்பத்தி உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு ஆகியவற்றின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
