இலங்கை செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவின் இடமாற்றம் ரத்து

பொலிஸ் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன வடக்கின், காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றப்பட்ட நிலையில் அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக, அவரை வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இவ்வாறு காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றுவதாக  பொலிஸ் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில்,  அந்த இடமாற்றம் ரத்து செய்யப்படுவதாக அதே ஆணைக்குழு மீள அறிவித்துள்ளது.

 அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, பொலிஸ் தலைமையகத்தின், பொலிஸ் மா அதிபரின் கொவிட் 19 கட்டுப்பாட்டறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் விவகாரத்தில், கைதின் போதும், விடுதலையின் பின்னரும் பொலிஸ் பேச்சாளராக ஜாலிய சேனாரத்ன வெளியிட்ட கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டன.

இது தொடர்பில் பாராளுமன்றில் உள்ளக பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் அதிருப்தி வெளியிட்டதுடன் பொலிஸ் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

 இவ்வாறான பின்னணியிலேயே, ஜாலிய சேனாரத்ன பொலிஸ் பேச்சாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Most Popular

To Top