கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
சுகாதார பழக்க வழக்கங்களை உரிய முறையில் பின்பற்றத் தவறும் நபர்களை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றச் செய்ய வேண்டியது அவசியமானது.
கொவிட் தொற்றாளிகள் கண்டறியப்படுவதன் காரணமாக சமூகத்தில் நோய்த் தொற்று பரவியுள்ளது என்று அர்த்தப்படாது.
தொற்றாளிகள் தொடர்பில் விசாரணை நடாத்தியும் எழுமாறான பரிசோதனைகள் நடத்தியும் இந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கொவிட் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து கண்டறிந்து கொள்ள முடிந்த காரணத்தினால் இன்னமும் கட்டுப்பாடின்றி சமூகத்தில் பரவியதாக கருதப்பட முடியாது.
தொற்றாளிகளுடன் தொடர்பு பேணியோரை தேடிக் கண்டறிவது இன்னமும் சவால் மிக்கதாக மாறவில்லை. கடந்த காலங்களில் மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அதே மக்களே இன்னும் இலங்கையில் இருக்கின்றார்கள். இந்த நோய்த் தொற்று பரவினால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
யாரேனும் முகக் கவசம் அணியாது இருந்தால் அவருக்கு அதன் பாதக விளைவுகளை மக்கள் தெளிவுபடுத்தி அவரை முகக் கவசம் அணியச் செய்ய வேண்டும்.
முகக் கவசம் இன்றி செல்வது சமூகத்திற்குள் நோய்த் தொற்று பரவ ஏதுவாகும் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
