இலங்கை செய்திகள்

வைரஸ் பரவலை தடுப்பதில் ஊடகங்களுக்கு கூடுதலான பொறுப்பு உண்டு– கெஹெலிய ரம்புக்வெல

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குறித்த வைரஸ் பரவலை தடுப்பதில் ஊடகங்களுக்கு கூடுதலான பொறுப்பு உண்டு என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஊடக நிறுவனங்கள் ஆற்றும் பணிகளை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பாராட்டியுள்ள அதேவேளை, மேற்படி தகவலையும் தெரிவித்துள்ளார். 

மக்களின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக செய்தி அறிக்கையிடல் பற்றிய பொது வேலைத்திட்டத்தை தயாரிப்பது அவசியமாகும். ஊடகங்கள் அறிந்தோ அறியாமலோ மக்களின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளன. தனி மனித உரிமை, நோய் என்பன பற்றி அறிக்கையிடும் போது வரையறையுடன் செயற்படுவது அவசியமாகும். இதுபற்றிய வழிகாட்டல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில் , கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையிடல் ஊடகவியலாளர்களுக்கு சவால்மிக்கதாகும் என்று தெரிவித்தார்.

வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு ஊடக நிறுவனங்களுக்கு இருப்பதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜகத் விஜயவீர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

Most Popular

To Top