இலங்கை செய்திகள்

உயர் நீதிமன்றத்தின் முடிவு ஊடகங்களில் வெளியானமையானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையா?

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க உள்ள நிலையில், நீதிமன்றத்தின் முடிவு தொடர்பான தீர்ப்பு ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

உயர் நீதிமன்றத்தின் முடிவு ஊடகங்களில் வெளியானமையானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஜே.சீ. அலவத்துவல ஆகியோர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜே.சீ. அலவத்துவல, அரசாங்கம் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தமது முடிவை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்.

எங்களுக்கு தெரிந்த நடைமுறை இதுதான். எனினும் ஊடகங்களில் உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவு குறித்து சபாநாயகர் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

எனினும் ஊடகங்களில் உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது. பத்திரிகைகள் அது பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரதான ஊடகங்களில் வெளியாகும் முன்னர் சமூக ஊடகங்களில் நீதிமன்றத்தின் முடிவு வெளியாகி இருந்தது.

நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயம் இவ்வாறு முன்னதாக பகிரங்கமான வெளியானமையானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விடயமாக நாங்கள் கருதுகிறோம் எனவும் அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top